சுவாமி விவேகானந்தர் (சனவரி 12, 1863 – சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றவை.
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துகளிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துகளை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.


