பதிவு செய்ய முடியாத நான்கு சக்கர வாகனத்தை விற்ற கார் விற்பனை நிறுவனம் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.4,08,000 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சார்ந்த புகாரி பாத்திமா என்பவர் திருச்செந்தூரிலுள்ள ஒரு கார் விற்பனை நிறுவனத்திடம் புதிய நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்கு பணம் செலுத்தியுள்ளார். கார் விற்பனை நிறுவனம் நான்கு சக்கர வாகனத்தை முறையாக பதிவு செய்து கொடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளது. மீண்டும் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இந்த புதிய நான்கு சக்கர வாகனத்தின் விற்பனையை அரசு தடை செய்துள்ளதாகவும், ஆகவே இந்த வாகனத்தை முறையாக பதிவு செய்ய இயலாது எனவும் கூறியுள்ளது.
உடனே பாதிக்கப்பட்ட நுகர்வோர் தான் ஏற்கனவே செலுத்திய பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால் கார் விற்பனை நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் பணத்தை தர மறுத்துள்ளது. இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் புதிய நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்கு ஏற்கனவே செலுத்தியுள்ள தொகையான ரூபாய் 1,98,000, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 2,00,000, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 4,08,000 ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


