காயல்பட்டினத்தில் மது அருந்திவிட்டு தகராறு செய்து மனைவியை ஜன்னல் கம்பியால் தாக்கியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் மங்களவாடி பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் இப்ராஹிம் (36). எலக்ட்ரீசியன். இவருக்கு மனைவி பெனாசீர் பாத்திமா (30), இரு குழந்தைகள் உள்ளனர். சித்திக் இப்ராஹிமுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி மதியம் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு, மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மீண்டும் தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சித்திக் இப்ராஹிம், ஜன்னல் கம்பியை உடைத்து அந்தக் கம்பியால் மனைவியை தாக்கியுள்ளார். இதில் பெனாசீர் பாத்திமா பலத்த காயம் அடைந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு, உடன்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து பெனாசீர் பாத்திமா அளித்த புகாரின்பேரில் ஆறுமுகனேரி காவல் நிலைய தலைமை காவலர் செபாஸ்டின் சுகந்தி வழக்குப் பதிவு செய்தார். ஆய்வாளர் மாரியப்பன், உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி, சித்திக் இப்ராஹிமை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனர்.


