நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து நாங்கள் கிளம்பினோம். எங்களை இஞ்சினியர் கிருஷ்ண குமார் அவர்கள் மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். இன்று ஈரான் நாட்டு உணவை சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தார் டாக்டர் சுதாகர். அங்கிருந்து நாங்கள் மெகபுல்லா என்னும் இடத்துக்கு கிளம்பினோம். அங்குள்ள உணவகத்தின் பெயர் யெஸ் பேலஸ்( Yes Palace) கும். இதன் பொருள் “ஆமா இது அரண்மனைதாங்க” என எடுத்துக் கொள்ளலாம். உண்மையிலே இந்த இடம் அரண்மனை போலத்தான் இருந்தது.
காரை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தோம் டூம் ( DOME) என்ற பெயர் பலகை தாங்கிய பிரமாண்டமான அந்த பில்டிங் காட்சியளித்தது. உள்ளே நுழைந்தோம். குழந்தைகள் விளையாட இடம். மற்றும் அழகான சிறு நீர் நிலை அதை சுற்றி உணவு அருந்துவதற்காக வசதி இருந்தது. அதன் அருகில் மீண்டும் யெஸ் பேலஸ் என்ற பெயருடம் சாப்பிடும் அறைகள் இருந்தன. அதற்குள் அமர்ந்து சாப்பிட வசதி இருந்தது. நாங்கள் நால்வரும் அங்கு அமர்ந்து சாப்பாட்டை ஆட்ர் செய்தோம்.
எனக்கு ஆவலாக இருந்தது , நேற்று அரோபியன் உணவு சாப்பிட்டோம். இன்றோ ஈரான் நாட்டு உணவு என்கிறார்கள். அது எப்படி இருக்கும் என ஆச்சரியத்தோடு எதிர்பார்த்து காத்து இருந்தேன்.
அங்கு முதலில் சுவையான கீரையைக் கொடுத்தனர். இது சுவையில் கொஞ்சம் வெற்றிலை, கொஞ்சம் துளசி மாதிரி இருந்தது. இதனை ஜர்ஜர் கீரையெனக் குவைத்தில் அழைக்கின்றனர்.? ஆங்கிலத்தில் இதனை ராக்கெட் இலைகள்(rocket leaves) என அழைக்கின்றனர்.
இப்போதுதான் இந்தக் கீரையை முதன் முதலில் சுவைக்க வாய்ப்பு கிடைத்தது. எனக்கும் பல நாடுகளுக்கு சுத்தி வந்த டாக்டர் சுதாகர் அவர்களுக்கும் இப்போதுதான் முதன் முதலில் சுவைக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வேக வைக்காத பச்சைக் கீரையைத்தான் தந்தார்கள்?. அதை நாங்கள் அனைவரும் விரும்பிச் சாப்பிட்டோம்.
இதன் சுவை டாக்டர் சுதாகர் அவர்களை கட்டிப் போட்டிருக்கும்போல, ஒன்றிரண்டு அல்லது மூன்று முறை இந்தக் கீரையைக் கேட்டு வாங்கி சாப்பிட்டார்.
இந்தக் கீரையுடன் பாலாடைக் கட்டியைச் சேர்த்துச் சாப்பிடும்போது வரும் சுவையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவ்வளவு அருமையாக இருந்தது. என அவர் சொல்லி சிலாகித்துக்கொண்டார்.
மேலும் முதல் நாள் நாங்கள் அரோபின் சாப்பாடு சாப்பிட்ட போது தந்த கத்தரிக்காய் மசியல், ரொட்டி உள்பட சில ஐட்டங்கள் அது போலவே இருந்தது.
ஆனாலும் மீன், கோழி மற்றும் ஆட்டு இறைச்சி உணவுகள் அவரைச் சுற்றி நிறைய இருந்தாலும் இந்த ஜர்ஜர் கீரைதான் அவரை அதிகம் கவர்ந்தது.
நாங்கள் வாங்கிய மீன் நன்கு வெந்து மல்லிகை பூ மாதிரி இருந்தது. நன்கு எண்ணெய்யில் பொரித்து இருந்த மீனைத் தோலுடன் சாப்பிடச் சுவையாக இருந்தது. வயிறு முட்ட சாப்பிட முயற்சிக்க வில்லை. ஏன் என்றால் வெளியூர், பயணம் . கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.
ஆனாலும் நான்கு பேரும் ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு அதற்கான விலையை கொடுத்து விட்டு வெளியே வந்தோம்.
அடுத்து இந்த ஊரில் என்ன விசேஷம் என்றவுடன் கிருஷ்ண குமார் சிரித்துக்கொண்டடே “ஸ்டார் பக்ஸ்” என்றார். அது என்ன? அது ஒரு அமெரிக்கா நாட்டில் காபி நிறுவனம். குவைத்தில் மட்டும் சுமார் 200 இடங்களில் உள்ளது. காரில் வரிசையில் நின்று ரேசனில் பொருள் வாங்குவது போலவே காபியை வாங்கி காரில் வைத்து குடிக்க வேண்டும்.
அவர் சொல்லும் போது ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் வயிறு புடைத்து விட்டது என்று சொல்லுவார்களே அதுபோலவே சாப்பிட்டு விட்டோம். அப்படியிருக்கும்போது காபி எப்படி குடிக்க என நினைத்தோம்.
ஆனால் அந்த இடத்தில் எப்படி காபி வாங்கி குடிக்கிறார்கள் என பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசையை கிருஷ்ணகுமார் அய்யாவிடம் கூறவும் அவர் அருகில் உள்ள ஸ்டார் பக்ஸ் காப்பி கடைக்கு அழைத்துச்சென்றார். எல்லோரும் காபி வேண்டாம் என்றே சொன்னார்கள். ஆனாலும் காபியை வாங்கி பார்ப்போம் என்று நான் கூறியதால், எனக்காக ஒரு காபி மட்டும் வாங்கலாம் என நினைத்தோம்.
ஸ்டார்பக்ஸ் கார்பொரேசன் என்பது அமெரிக்க நாட்டின் காபி நிறுவனம் ஆகும். இந்தப் பெருங்குழுமம் உலகத்தில் பரவலாக தன் கிளை அமைப்புகளைக் கொண்டு இயங்கும் சங்கிலித் தொடர் வணிக நிறுவனம் ஆகும். சூடான காபி, குளிர்ந்த காபி, உள்பட சில தின்பண்டங்களையும் விற்பனை செய்கின்றது. இதன் தலைமைச் செயல் அதிகாரியாக பிரயன் நிக்கோல்(செப்டம்பர் 2024) என்பவர் உள்ளார்.
இந்த நிறுவனத்தினை நிறுவியவர்கள் கோர்டொன் பவ்கர், ஜெர்ரி பால்ட்வின், ஸெவ் சீக்ல் ஆகியோர் ஆவார். இந்த நிறுவனம் 1971 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 30 ந்தேதி வாஷிங்டன் சியாட்டில் தொடங்கியது. இங்குதான் இவர்களின் தலைமையகமும் உள்ளது.
சரி குவைத்துக்கு எப்போது இந்த நிறுவனம் வந்தது என விசாரித்தோம். 1999 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் குவைத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. பல இடங்களில் காரில் வாங்கி கொண்டு , காரில் வைத்தே குடிக்கலாம். சில இடங்களில் அமர்ந்தும் குடிக்கலாம். இந்த சுவை அமெரிக்கர்களும் மிகவும் பிடித்தது, அதன் பின் அரேபியர்களும் பிடித்தது. தற்போது இந்தியர்களுக்கும் பிடித்து விட்டது. குறிப்பாக தமிழர்க-ளும் இந்த காபியை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
நாங்கள் மெகபுல்லாவில் உள்ள ஒரு ஸ்டார் பக்ஸ் காபியகத்துக்கு வந்தோம். காரில் வரிசையாக நின்று ஒன்றன் பின் ஒன்றாக சென்றோம். அங்குள்ள ஒரு கவுன்டரில் இந்திய பணத்துக்கு 540 ரூபாய் கட்டினோம். அடுத்த கவுண்டரில் சிரித்த முகத்துடன் ஒருபெண் எங்களுக்கு ஸ்டார் பக்ஸ் கொடுத்தார். அதை வாங்கி கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.
எங்களை, நாங்கள் தங்கியிருந்த வீட்டில் விட்டு விட்டு கிளம்பினார் கிருஷ்ண குமார் அய்யா. டாக்டர் சுதாகரின் மாணவரும் விடைப்பெற்றுக்கொண்டார்.
நாங்கள் ஓய்வு எடுக்க ஆரம்பித்தோம். அதற்கிடையில் வாங்கி வந்த காபியை சுவைக்கலாம் என எடுத்தேன். ரசித்து குடிக்க முடியவில்லை. எனவே அப்படியே வைத்து விட்டு படுத்து தூங்கி விட்டேன்.
அசோக் அய்யா டாக்டர் சுதாகரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டார். “சற்று நேரத்தில் உங்கள் நண்பர் பலவேச முத்து வருவார். உங்களை விருந்துக்கு அழைத்து செல்வார்” என்றார்.
அதன் பின்னர்தான் எங்களுக்கு விருந்து பற்றிய நினைப்பே வந்தது. ஏற்கனவே குவைத்தில் வாழும் தமிழர்களின் குழந்தைகளின் ஆட்டமும் பாட்டமும் பட்டையைக் கிளப்பிய படி இருந்தது. அது எனது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அவர்களின் திறமையைக் கண்டு வியந்தபடியே இருந்தேன். என்னை விட டாக்டர் சுதாகர் அதிகமாக ரசித்தார். அதைப்பற்றியே பேசிக்கொண்டே இருந்தார். ஆனாலும் “சீக்கிரம் கிளம்பி இருங்கள். இப்போது பலவேசமுத்து வந்து விடுவார். விருந்துக்கு செல்ல வேண்டும்” என்று என்னிடம் கூறினார்.
நானும் உடனே கிளம்பி ஆயத்தமானேன்.
மாலை ஐந்து மணி இருக்கும். பலவேசமுத்து அய்யா வந்தார்கள். எங்களை காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்கள்.
எங்குச் செல்கிறோம் எனத் தெரியவில்லை. விருந்து என்றால் இரவு 8 மணிக்கு மேல் தானே இருக்கும். ஒருவேளை வேறு எங்காவது எங்களை அழைத்துச்செல்கிறாரா? அவரும் கூறவில்லை. நாங்களும் கேட்க வில்லை.
சில நிமிடங்கள் கார் ஒரு இடத்தில் நின்றது. அங்குக் குவைத் மக்கள் சுமார் ஆறு பேர்கள் அமர்ந்திருந்தனர். அனைவரும் அரபி உடையில் இருந்தனர். இந்த இடத்தின் பெயர் அகமதி. இந்த இடத்துக்கு சொந்தக்காரர் குவைத் அரசரின் சொந்தக்காரர். பலவேசமுத்து அய்யாவுக்கு தொழில் பங்குதாரர். அவரின் பெயர் சபா. அல்சம்மரி. பெரும்பாலுமே சபா என பெயர் வந்தால் அவர்கள் அரசருக்கு சொந்தகாரர்கள் என அர்த்தம்.
அந்த இடம் ஒரு முற்றம் போல இருந்தது. இந்த இடத்தினை திவானியா என்கிறார்கள். இந்த இடத்தில் தான் சபா அல் சம்மரி அமர்ந்திருக்க அவரது உறவினர்கள் எல்லாம் வந்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டிருந்தார். பெரியவர்களிடம் இவர் ஆசிர்வாதம் வாங்கினார். சிறியவர்களுக்கு இவர் ஆசிர் வாதம் கொடுத்தார். வாரம் தோறும் திங்கள் கிழமை உறவினர்கள் அனைவரும் இப்படி கூடுவது குவைத்தில் வழக்கமாக கொண்டு இருந்தார்கள்.
எத்தனை நல்ல பழக்கம். உறவுகளை வணங்குவதும், உறவுகள் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொள்வதும் எத்தனை பெரிய சந்தோசம்.
ஒருகாலத்தில் தமிழகத்தில் இந்த பண்பு உண்டு. வயதானவர்களை காண இளையவர்கள் வந்து செல்வார்கள். உறவுகளை மதிப்பார்கள். உறவுகள் தொடர பேணுவார்கள். ஆனால் இந்த கலாச்சாரம் எல்லாம் கொஞ்ச நாளாக நம்மை விட்டு போய் விட்டது. உறவுகளுக்கு இடையே நிறைய விரிசல் எற்பட்டு விட்டது. தமிழர்கள், போட்டி பொறாமை தனிமைபட்டு போய் கிடக்கிறார்கள்.
ஆனால் இன்றோ குவைத்தில் ஒரு அரண்மனை குடும்பத்தில் எத்தனை உறவுகளை காண்கிறோம்.
சிலர் எதையோ ஒரு குடுவையில் போட்டு அத்துடன் ஒரு குழாயை இணைத்து ருசிக்க ருசிக்கப் புகைத்துக் கொண்டிருந்தனர்.
இந்த மாதிரி புகையிலை புகைப்பதை மும்பை பகுதியில் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்குக் குவைத் மக்கள் பயன்படுத்தும் இந்தக் கருவி சற்று வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது.
எங்களை ஒரு நாற்காலியில் அமரவைத்தார்கள். அனைவரும் எழுந்து நின்று கைகுலுக்கினார்கள்.
“ஆங்கிலத்தில் வருக வருக” என்றனர்.
அவர்களின் ஆங்கில உச்சரிப்பு புரியச் சற்று கடினமாக இருந்தது.?
குடுவையில் எதையோ போட்டு புகையை இழுக்கிறார்கள் என்று கூறினோமே அதில் ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்டாபெரி என பல பேவர்களை வைத்து புகை விடுவார்களாம். அதன் வாய் பகுதியில் பைப் போன்ற ஒன்றை வைத்து இருப்பார்கள். அதை யார் உறிகிறார்களோ, அவர்கள் தனித்தனியாக வைத்துக் கொள்வார்கள். அவர்கள் உறியும்போது அந்த பைப்பை வைத்து உறிந்து கொள்வார்கள்.
சில வேளை ஒரு குடுவையில் இரண்டு பேர் உறிந்து புகைவிடும் வழக்கமும் உண்டாம்.
சற்று நேரத்தில் நடுவிரல் உயரத்தில் இரண்டு விரல்கள் தடிமனில் ஒரு கண்ணாடி தம்பளரில் காப்பி கொண்டு வந்து கொடுத்தார்கள்.
இதன் சுவை கசப்பாக இருந்து. இனிப்புச் சுவை மருந்துக்குக் கூட அதில் இல்லை. கசாயம் மாதிரி இருந்தது.
அந்தச் சுவை எனக்குப் பிடிக்கவில்லை.
பாவமாகப் பலவேச முத்து அய்யாவை டாக்டர் சுதாகர் பார்த்தார்.
பலவேசமுத்து “டேய் இதுதான் அரேபியன் காப்பி. இதனைப் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்ட படி குடிக்க வேண்டும்” என்றார்.
சரிதான்.
அனைவர் முன்னாலும் ஒரு தட்டு நிறையப் பேரீச்சம் பழம் இருந்தது. அந்த பேரீச்சம் பழம் தேன் சொட்டசொட்ட இருந்தது போல இருந்தது. எத்தனை பேரீச்சம் பழம் என்றாலும் சாப்பிடலாம். ஆனால் இந்த காபியை எப்படி குடிக்க-. நமக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.
இந்தக் காப்பியைக் குடித்தபடியே பேரீச்சம் பழத்தைச் சாப்பிடுகின்றனர்.
நாம் காப்பியுடன் வடை சாப்பிடுவது போல அவர்கள் காப்பியுடன் பேரீச்சம் பழம் சாப்பிடுகின்றனர்.
என் நாக்கிலும் உதட்டிலும் தாண்டவமாடிய அந்தக் காப்பியின் சுவையை மாற்ற வேண்டும் போல் இருந்தது.
பேரீச்சம் பழம் சாப்பிட்டேன். தண்ணீர் குடித்துப் பார்த்தேன் பலன் எதுவும் கிட்டவில்லை. இதே நிலைமை டாக்டர் சுதாகருக்கு ஏற்பட்டது. எனவே அவரும் என்னை நோக்கி பார்த்தார்.
“சார்… தேநீர் வேண்டுமா?” என ஒரு குரல் கேட்டது.
அந்தக் குரலின் சொந்தக்காரன் ஒரு தமிழன். விருந்தினருக்கு எல்லாம் காப்பி மற்றும் தேநீர் கொடுப்பது உச்சரிப்பதுதான் அவரின் வேலை.
அந்த குரலை கேட்டவுடன் சந்தோசம். டாக்டர் சுதாகர் உற்சாகமாக சொன்னார்.
“சரி தேநீர் கொடுங்கள்”
உடனே தேநீர் கொண்டு வந்து எங்கள் இருவருக்கும் கொடுத்தார். தேநீர் சுவையாக இருந்தது.
வெளியே விருந்தினர்கள் அனைவரும் போடப்பட்ட நற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பாலைவனக்காற்று அவர்களுக்கு மாலை வேளையில் சுகத்தினை தந்திருக்க வேண்டும் எனவே உறவினர்கள் அனைவரும் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருநதார்.
அங்கே போடப்பட்ட அனைத்து பெஞ்சும் நிறைந்து காணப்பட்டது. அனைவரம் அரபி உடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
பலவேசமுத்து அய்யா விருந்துக்கு அழைத்த நம்பர்களும் ஒவ்வொருவராக வந்தவண்ணம் இருந்தனர். பின்னர் அருகிலிருந்த குளிரூட்டப்பட்ட அறை அழைத்துச் சென்றனர். அங்கு உள்ள நாற்காலி அமர்ந்தோம்.
அதில் மிகப்பெரிய டிவி பொட்டி ஒன்று இருந்தது. அதில் உள்ளூர் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. அதில் குவைத் அரசர் பேசிக்கொண்டிருந்தார். குவைத்தில் தற்போது இளவரசர் இல்லை. எனவே இளவரசரை அறிவிப்பார்கள் என ஆவலோடு அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையில் நாங்கள் விருந்துக்கு வேறு வந்திருக்கிறோம். இங்கே அமர்ந்து சாப்பிடும் படி வசதி ஒன்று இல்லை. எங்கே போய் சாப்பிட போகி«றோம். எங்களுக்கு என்ன விருந்து வைக்கப்போகிறார்கள் என கேள்வி எழுந்து கொண்டிருந்தது.
உள்ளே போய் நாங்கள் அமர்ந்த உடனே மீண்டும் காபி பாறிமாற அந்த தமிழ் பையன் வந்து விட்டாம்.
பேரீச்சை பழம் தந்து விட்டு, டீ வேண்டுமா? காபா வேண்டுமா? என கேள்வி கேட்டான்.
இந்த காபா சாப்பிட்டால் விருந்து சாப்பிட வசதியாக இருக்கும் போல, எனவே அந்த காசயம் போன்ற காபாவை எங்களோடு வந்த தமிழர்களும் குடித்தார்கள்.
காப்பி பரிமாறிய பழைய பாத்திரங்களை அங்குள்ள கண்ணாடி பெட்டியில் அடுக்கி வைத்திருந்தனர்.
“அவைகளில் மிகவும் பழமையானது இதுதான்” என்றார் சபா. அல் சம்மரி.
அந்தப் பாத்திரம் பார்க்க அலாவுதீன் கதையில் பூதத்தை அடைத்து வைத்திருக்கும் ஜாடி மாதிரியே தெரிந்தது!
“இந்தப் பாத்திரம் 300 வருடங்கள் பழமையானது. இவை எங்கள் விலை மதிக்க முடியாத சொத்து. இவற்றை யாராவது கவர முயச்சித்தால் உயிரைக் கொடுத்தும் மீட்டெடுப்போம்” என்றார்.
எனக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இந்தப் பாத்திரங்கள் குவைத்தியர்கள் என் அப்பா பயன்படுத்தியது, என் தாத்தா பயன்படுத்தியது என அவர்கள் முன்னோர்கள் நினைவாகவே இந்தப் பாத்திரங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
அதாவது “அந்தப் பழைய பாத்திரங்களை அவர்கள் தங்கள் முன்னோர்களாகவே பார்க்கின்றனர்” எனப் புரிந்து கொண்டேன் என்றார் சுதாகர்.
மேலும் அவர் என்னிடம் “என் தந்தை பயன்படுத்திய பொருட்களைப் பார்த்தால் போதும் அவரின் நினைவு உடலில் மின்சாரமாக பாயும்”. என்றார்.
உணர்வுகள் அனைவருக்கும் ஒன்றுதானே. அது தமிழர் என்று பார்க்கப்போகிறதா? அல்லது குவைத்தியர் என பார்க்கப்போகிறதா? உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணர்வு ஒன்றுதானே.
அந்த அறையின் மத்தியில் இரண்டு பெரிய பாய்களை விரித்தனர். அதனில் நிறையக் குளிர் பாண பாட்டில்களை அடுக்கினார்கள்.
அடுத்து அவர்கள் வைத்த உணவை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.
(குவைத் பயணம் தொடரும்)