நினைவுகூரும் நாள் (Remembrance Day) என்பது போரில் தமது உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தும் நாள் ஆகும். இந்த நாள் நவம்பர் 11 இல் பொதுநலவாய நாடுகள் பலவற்றில் அவதானிக்கப்படுகிறது. இந்த நாளில் ஒரு பொப்பியை நினைவுக் குறியீடாக அணிவர். நினைவுகூரும் நாள் பல ஈழத் தமிழர்கள் அவதானிக்கும் மாவீரர் நாளுக்கு ஒத்தது.
முதலாம் உலகப் போர் முடிவில் பொதுநலவாய நாட்டு கூட்டுப்படைக்கும் செருமானியருக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இப் போர் நிறுத்தம் 1918ம் ஆண்டு, 11ம் மாதம், 11ம் திகதி, காலை 11 மணிக்கு நிகழ்ந்தது. இப்போர் நிறுத்தப்பட்டதையும் போரினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையிலும் அன்றிலிருந்து இந்த நாள் நினைவில் நிறுத்தப்படுகின்றது.
இந்த நாள் ஐக்கிய இராச்சியத்தில் ஐந்தாம் சோர்ச் மன்னரால் நவம்பர் 7, 1919ம் ஆண்டு முதலாம் உலகப் போரில் உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூரும் நாள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது.எனினும் இன்று அனைத்துப் போரிலும் உயிர் நீத்தவர்களை இந்த நாளில் நினைவு கூருவர்.


