மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958). இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர். பரவலாக இவர் மௌலானா ஆசாத் என அறியப்படுகிறார்; ஆசாத் என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.
இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூரும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.
இந்தியாவில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வி முறையை உருவாக்க பாடுபட்டார், மேலும் அனைவருக்கும் இலவச ஆரம்ப கல்வி கிடைக்கவும் நவீன கல்வி முறைக்கும் வித்திட்டவர் ஆசாத் தான். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நிறுவுவதற்கும், பல்கலைக்கழக மானியக் குழு அமைவதற்கும் பாடுபட்டார்.


