தூத்துக்குடியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.71 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமையில் இன்று (11.06.2022) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
முகாமில் 102 மாற்றுத்திறானாளிகளுக்கு ரூ.12.71 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் உதவித்தொகைக்கான ஆணைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவினை சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான யுடிஐ அடையாள அட்டை சுமார் 50 பேருக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் மாற்றுத்திறனாளிகள் துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன திட்டங்கள் வேண்டும் என்று ஆய்வு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அரசு வழங்கக்கூடிய யுடிஐ அடையாள அட்டை என்பது ஆதார் அட்டை போன்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு சம உரிமை திட்டத்தின் கீழ் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், திட்ட இயக்குநர் (ஊரக வாழ்வாதார இயக்கம்), இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்; தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், மாவட்ட தொழில் மைய அலுவலர், உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மூலமாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான (18 வயதிற்கு மேற்பட்ட) சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இம்முகாமில் 30 தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பங்கேற்று தேர்வு செய்து வருகின்றனர். சுமார் 800 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றுள்ளனர்.
முகாமில் அடையாள அட்டை இல்லாதவர்கள் பதிவு செய்துகொள்ளலாம். மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகிறது. பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. இந்த முகாம் நிச்சயமாக உதவிகரமாக இருக்கும். மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோருக்கும் உதவிகள் செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500ல் இருந்து ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும். தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். நீங்கள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அல்லது ஆட்சியர் அலுவலகத்தில் மனு மட்டும் அளித்தால் போதும் உங்களுக்கு உடனடியாக உதவுவதற்கு அரசு தயாராக இருக்கிறது என பேசினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் மரு.வீரபுத்திரன், மாவட்ட தொழில் மையம் மேலாளர் சொர்ணலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


