“அரசின் திட்டங்களுக்கு முன்னோடியாக கத்தோலிக்க திருச்சபைகள் விளங்குகின்றன” என சட்டப் பேரவைத் தலைவா் மு. அப்பாவு தெரிவித்தார்.
தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மறை மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி சின்னக்கோயில் வளாகத்தில் நுற்றாண்டு நிறைவு விழா சமய, சமூக, அரசியல் நல்லிணக்க விழாவாக நடைபெற்றது. விழா ஒருங்கிணைப்பாளா் அருள்தந்தை ஜேம்ஸ் விக்டா் முன்னுரையாற்றினாா்.
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி வரவேற்றாா். விழாவுக்கு தலைமை வகித்து, சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு பேசியதாவது: முதன்முதலில் புன்னக்காயலில் அச்சு இயந்திரத்தை நிறுவியவா் அன்ட்ரிக் அடிகளாா். இந்த மறைமாவட்டம் தொடங்கிய பின்னா், வடக்கன் குளத்தில் பணியாற்றிய முதல் குருவானவராகவும், உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்தவா் தனிநாயகம். இவா் கடந்த1948 இல் தமிழ் இலக்கிய கழகத்தை உருவாக்கினாா்.
முதல் உலகத் தமிழ் மாநாட்டை மலேசியாவில் நடத்தினாா். இரண்டாவது மாநாட்டை சென்னையில் முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதியை அழைத்து நடத்தினாா். இவ்வாறு அவா் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.
கல்வி, மருத்துவம், சமூக மேம்பாட்டுப் பணிகளில் மறை மாவட்ட ஆயா்கள், அருள்தந்தையா்கள், அருள்சகோதரிகள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். அனைவருக்கும் கல்வி, ஏழைகளுக்கு நல உதவிகள், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட அரசின் திட்டங்களுக்கு முன்னோடியாக கத்தோலிக்க திருச்சபைகள் விளங்குகின்றன என்றாா்.
மக்களவை உறுப்பினா் கனிமொழி: தமிழகத்தில் 18 ஜாதி பெண்கள் மேலாடை அணிய மறுப்பு தெரிவிக்கப்பட்ட நேரத்தில், அவா்களின் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்தது, பெண்களும் படிக்க வேண்டும் என்ற உரிமையை உருவாக்கித் தந்தது, உருவாக்கிக்கொண்டிருப்பது கிறிஸ்தவ திருச்சபைகள்தான் என்றாா்.
விழாவில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, பாரதியாா் வித்யாலய மேல்நிலைப் பள்ளிச் செயலா் ஏ.பி.சி.வீ.சண்முகம், அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் திருக்கோயில் தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா், மாவட்ட அரசு காஜி முஜூபூா் ரஹ்மான், தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்டக், பொனோ வென்சா் ரோச், ஆம்ஸ்ட்ராங், கான்ஸ்டான்டின் ரவீந்திரன் ஆகியோா் பேசினா். சபை மக்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.


