டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டு சாதனை படைத்த தூத்துக்குடி மரியன்னை கல்லூரி மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பு பேரணியில் கலந்து கொண்டு தேசிய அளவில் மூன்றாம் பரிசு வென்ற தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மாணவியர் அல்ஷியா மற்றும் கனகலட்சுமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரியின் செயலாளர் அரூட்சகோதரி சி. ஷிபானா, முதல்வர் அரூட்சகோதரி ஜெஸி பெர்னாண்டோ, சுயநிதி பிரிவு இயக்குநர் அரூட்சகோதரி ஜோசபின் ஜெயராணி, துணை முதல்வர், அரூட்சகோதரி எம். எஸ். எழிலரசி மற்றும் தேர்வாணையர் அரூட்சகோதரி ரீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
கல்லூரி நிர்வாகத்தினர் சாதனை மாணவியர் இருவரையும் இசைக்குழு இன்னிசை இசைக்க ஊர்வலமாக அழைத்து சென்று உற்சாகமான வரவேற்புடன் விழாவை இனிதே துவங்கினர். முதல்வர் மற்றும் செயலர் மாணவிகளை வாழ்த்தி அவர்களின் கடமையுணர்ச்சி, ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் போன்ற மேலான பண்புகளுக்காக அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி இவர்களுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கினர்.
தேசிய மாணவர் படை, அதிகாரி மேரி பிரியா, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக ஏற்புரையாற்றி, தேசப்பற்று மற்றும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து பயணிக்க அவர்களை ஊக்கமளித்தார். இந்த நிகழ்வு தேசிய மாணவர் படை மாணவர்களின் வீரத்தையும், நாட்டிற்காக இளம் தலைவர்களை உருவாக்கும் கல்லூரியின் உறுதிப்பாட்டையும் ஒளிர்வித்தது.


