தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கடாட்சபுரம் பகுதியில் ஞானமுத்து என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 100 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு கடந்த சில வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. இந்த நிலையில் அந்த பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக அந்த ஆழ்துளை கிணறு தூர்ந்து போன நிலையில் மூடி போட்டு மூடப்பட்டது.
இதற்கிடையில் கடந்த 18 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அந்த மூடி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி மேய்ச்சலுக்கு சென்ற ஆடு ஒன்று அந்த ஆழ்துளை கிணறில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர் துரைசிங்கம் என்பவர் தலைகீழாக இறங்கி அந்த ஆட்டை பத்திரமாக மீட்டார்.
இந்த நிலையில் சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் உத்தரவின் பேரில், நிலத்தின் உரிமையாளரான ஞானமுத்து என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணறை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டார். அதன் பேரில் ஜேசிபி இயந்திரம் மூலம் திறந்து கிடந்த ஆழ்துளை கிணறு மூடப்பட்டது.


