அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழைமையான வைகுண்டபதி பெருமாள் ஆலயத்தில் அனுமன் சந்நிதியில் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள பழமையான வைகுண்டபதி பெருமாள் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. அனுமன் சந்நிதியில் கடந்த மூன்று நாட்களாக அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிலையில் அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு அனுமனுக்கு வடை மற்றும் வெற்றிலை மாலை சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
இதை தொடர்ந்து காலை 9 மணி அளவில் பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் அதனைத் தொடர்ந்து பிற்பகல் சிறப்பு தீபாராதனையும் நடைபெற உள்ளது. மாலை 6 மணி அளவில் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் அனுமனுக்கு வெத்தலை மாலை வெண்ணை ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி தரிசனம் செய்து வருகின்றனர்.


