ன்சாரத் துறையை கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் ஹெச்எம்எஸ மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. தொழிலாளர் முன்னேற்ற பேரவை சார்பில் சுசீ.ரவீந்திரன், எம்.கருப்பசாமி, எஸ்.ராமசாமி, ஐஎன்டியுசி சார்பில் மாவட்டத் தலைவர் ராஜகோபாலன், கருப்பசாமி, பால்ராஜ், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.ரசல், பொருளாளர் அப்பாத்துரை, மாவட்ட நிர்வாகிகள் முனியசாமி, மாரியப்பன், காசி, குன்னிமலையான், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர்; லோகநாதன், பொருளாளர் பாலசிங்கம், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் சகாயம், மாவட்டச் செயலாளர் சிவராமன், ஹெச்எம்எஸ் சார்பில் மாவட்ட அமைப்பாளர் நிர்மல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தொழிலாளர் விரோத 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை அமுல்படுத்தும் அறிவிக்கையை வெளியிடும் தீவிர நடவடிக்கையில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்த சட்டத் தொகுப்புகள் நாட்டின் 58 கோடி தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும், நிரந்தர வேலைகளை ஒழித்து விடும், 8 மணி நேர வேலை, சங்கம் சேரும் உரிமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே அம்முயற்சியை கைவிட வேண்டும்.
மத்திய பட்ஜெட்டில் கார்பரேட் நிறுவனங்களுக்கு அளவற்ற சலுகைகளை கொடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை அமுல்படுத்த வேண்டும். அரசு, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும். ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், மின்சாரத் துறையை கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய இயக்கம் நடத்த சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ், எல்பிஎப், ஏஐசிசிடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழகம் முழுவதும் பிப்-6 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.
அதன் பகுதியாக தூத்துக்குடி அண்ணா நகரில் பிப்-7 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதனை தொட்ர்ந்து பிப்-12 அன்று கோவில்பட்டி, எட்டையபுரம், 13-ஆம் தேதி புதுக்கோட்டை, புதியம்புத்தூர், தாளமுத்துநகர், 14-ஆம் தேதி ஆத்தூர். ஆறுமுகனேரி, திருச்செந்தூர், 15-ஆம் தேதி முத்தையாபுரம், விளாத்திகுளம் ஆகிய மையங்களில் ஆர்ப்பாட்டமும் துண்டுப்பிரசுர விநியோகமும் நடைபெற உள்ளது. இப்பிரச்சினையை மையப்படுத்தி மாவட்டம் முழுவதும் 50000 துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது


