தூத்துக்குடி அருகே மறவன்மடம் கிராமத்தில் கருப்பு கொடியுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் மறவன்மடம் கிராமத்தில் சாலை அமைக்க வலியுறத்தி கருப்பு கொடியுடன் பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “மறவன்மடம் ஊராட்சியில் உள்ள வருமானவரி நகரில் 150க்கும் மேற்ப்பட்ட மக்கள் வசிக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக சாலை வசதி வேண்டி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் மனு கொடுத்தும் வந்தோம்.
இதுவரை எங்களுக்கு சாலை வசதி அமைத்து கொடுக்கவில்லை. எங்கள் பகுதியில் உள்ள சாலைகள் மணல் பாங்கானதால் வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. 2023 டிசம்பர் வெள்ளத்திற்கு பிறகு சாலைகளில் மணல் திட்டுகளினால் சாலைகள் உபயோகமற்ற முறையில் உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் மிதிவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து செல்லும் நிலை உள்ளது. எனவே தார்சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியல் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக தூத்துக்குடி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் சுமார் 5 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


