கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் அனுமதியின்றி விளம்பர பலகை வைத்தால்அபராதத்துடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கருங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.பாக்கியலீலா, சி.செல்வி ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிரதான சாலைகள், இணைப்பு சாலைகள், சாலையின் மையப்பகுதிகள், பொது இடங்கள், தனியாருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கட்டிடங்கள் மீது நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ விளம்பர பலகைகள், டிஜிட்டல் விளம்பர பலகைகள், சுவர் விளம்பரங்கள் மற்றும் பேனர்கள் அமைக்கும் முன் மாவட்ட ஆட்சியரிடம் அதற்கான அனுமதியை பெற வேண்டும்.அனுமதி கிடைத்த பின்னர் அதில் இடம்பெறும் விளம்பரம் குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பித்து விளம்பர கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு இல்லாமல் உரிய அனுமதியின்றி அமைக்கப்படும் விளம்பர கட்டமைப்புகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. எனவே முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை, அபராதமும் விதிக்கப்படும். இப்போறு அதில் கூறப்பட்டுள்ளது.


