நெல்லை கருங்குளம் பகுதியில் இருந்து மேலப்பாளையம் வரை பாளையங்கால்வாய் முதல் கட்ட தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சுகுமார் மாநகராட்சி கமிஷனர் சுகபுத்திரா முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
நெல்லை மாநகரப் பகுதியில் பிரதானமான பாளையங்கால்வாய் திகழ்ந்து வருகிறது இந்த கால்வாயில் அமலை செடிகள் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளது . இதனை சீர் செய்யும் விதமாக தனியார் அமைப்பான எக்னரோ நிறுவனம் மற்றும் நீர்வளத் துறையும் இணைந்து கருங்குளம் பகுதி முதல் பாளையங்கால்வாயில் அமலை செடிகள் மற்றும் கரையில் உள்ள முட்செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகளை கலெக்டர் சுகுமார் தொடங்கி வைத்தார்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தருவை பச்சையாற்றை பாளையங்கால்வாய் கடக்கும் இடத்தில் 13க்கு மேற்பட்ட மதகுகள் உள்ளது. இந்தமதகை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அதிரடியாக தருவை பகுதிக்கு தீடீர் விசிட் செய்தார். அங்குள்ள மதகுகளை அவர் பார்வையிட்டார். தருவை பகுதியில் ஒரே இடத்தில் அருகருகே உள்ள 13 மதகுகளை சீரமைப்பு பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகள் இந்தபணியை மழைக்காலம் வரும்முன்புசெய்து முடித்து தருவதாக உறுதி கூறினர்.
குன்னத்தூர் பகுதியில் திருநெல்வேலி கால்வாய் மற்றும் நைனார் குளம் கிளை கால்வாய் பிரியும் இடத்திலும் கல்லணை பள்ளி அருகே நயினார் குளம் கால்வாயினையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கார் சாகுபடிக்கு முன்பாக அமலை செடிகள் அகற்றுவதும் தூர் வாருவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தாமிரபரணி வடிநிலை கோட்ட பொறியாளர் கோவிந்தராசு நெல்லை மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் சந்திரமோகன் உதவி செயற்பொறியாளர்கள் ஆவுடைய நாயகன் தங்கப்பாண்டி உதவி பொறியாளர் சிவா நந்தினி, பாளையங்கோட்டை தாசில்தார் இசைவாணி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தருவை பிச்சி மணி, எக்னரோ நிறுவனத்தினை சேர்ந்த ஸ்ரீனிவாசன், ராதா, கபடி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்


