தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்பு பெற தற்போது விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. இதற்கான கட்டணமாக ஒரு இணைப்பிற்கு 8110 ரூபாய் நிர்ணயம் செய்து பேரூராட்சி நிர்வாகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த குடிநீர் இணைப்புக்கான கட்டணம் அதிகப்படியாக உள்ளது என கூறி பலரும் புலம்பி வந்த நிலையில், சாத்தான்குளம் பேரூராட்சியின் 8-வது வார்டு முன்னாள் கவுன்சிலரான எட்வர்ட் ராஜதுரை என்பவர் குடிநீர் இணைப்புக்கான கட்டணம் ரூபாய் 8110 என்பது அதிகப்படியாக உள்ளது எனவும், அதனை கண்டித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாகவும் கூறி அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று மாலை சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே எட்வர்ட் ராஜதுரை தலைமையிலான 6 பேர் திடீரென பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த கட்டண அறிவிப்பை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் இப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி எனவும், உண்ணாவிரதத்திற்கு அனுமதி இல்லை எனவும் கூறி அனைவரையும் எழுந்திருக்குமாறு கூறினர்.
அப்போது முன்னாள் கவுன்சிலர் எட்வர்ட் ராஜதுரை உடன் வந்த 5 பேர் போலீசார் கூறியதும் “நமக்கு எதுக்குப்பா வம்பு” எனக்கு கூறி தன்னுடன் வந்த முன்னாள் கவுன்சிலரை “தன்னந் தனியாக விட்டு விட்டு” போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
ஆனாலும் பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டண உயர்வை கண்டித்து தொடர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் கவுன்சிலர் எட்வர்ட் ராஜதுரையை போலீசார் கைது செய்து வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரையும் போலீசார் வேணில் ஏறுமாறு கூறினர்.
அப்போது அவருடன் வந்த அந்த 5 பேரும் “ஐயா எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை” “எல்லாமே எங்க அண்ணன் தாங்க” “எல்லாமே எங்க அண்ணன் தாங்க” என தன்னுடன் வந்த முன்னாள் கவுன்சிலரை போலீசாரிடம் மாட்டிவிட்டு “போலீசாருக்கே டிமிக்கி கொடுத்து தப்ப முயன்றனர்”.
அதிலும் உடன் வந்த மற்றொருவர் ஒரு படி மேலே போய் “எப்படியும் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள்” என எண்ணி வேக வேகமாக போராட்ட நடந்த இடத்தில் இருந்து ஓடி “ஒரு குட்டி சுவறில் ஏறி அலைக்காக தாவி” தப்பினார்.
இதனால் போராட்ட களம் திடீரென சிரிப்பு களமாக மாறியது.
எனினும் “அஞ்சாத சிங்கமாக விஜயகாந்துக்கே டப் கொடுக்கும்” வகையில் தன்னந் தனி ஆளாக நின்று கொண்டிருந்த முன்னாள் கவுன்சிலரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
எனினும் சாத்தான்குளம் பகுதி மக்கள் கூறுகையில் மற்ற பேரூராட்சிகளை விட சாத்தான்குளம் பேரூராட்சியில் விதிக்கப்பட்ட குடிநீர் இணைப்பு கட்டணம் 8110 ரூபாய் என்பது மிகவும் அதிகம் எனவும், இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாகவும், அதனை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டணத்தை குறைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


