உலகப் புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்.11 காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் அக்டோபர் 20-ம் தேதி இரவு நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் திருக்கோயிலின் உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) காலை கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாகத் தொடங்குகிறது.
திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை (அக். 10) பகல் 11 மணிக்குக் காளிபூஜை மற்றும் அன்னதானம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மகுட இசை, சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, பரதநாட்டியம் மற்றும் இரவு வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை (அக். 11) அதிகாலை நடைபெறவுள்ளது. அதன்படி, அதிகாலையில் கொடிப்பட்ட ஊர்வலமும், காலை 5 மணிக்குக் கொடியேற்றமும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, கொடிமரத்திற்குப் பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்படவுள்ளது.
திருவிழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரை அம்மன் மற்றும் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மேலும், இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 20-ம் தேதி நள்ளிரவில் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 21-ம் தேதி கடற்கரை மேடை மற்றும் சிதம்பரேஸ்வரர் கோயில் பகுதிகளில் எழுந்தருளும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
காலை 6 மணிக்குத் தேரில் முக்கிய வீதிகளில் பவனி வரும் அம்மன், மாலையில் கோயிலை வந்தடைந்ததும் கொடியிறக்கம் செய்யப்பட்டு, பக்தர்களுக்குக் காப்பு களையப்படும். நள்ளிரவு 12 மணிக்குச் சேர்க்கை அபிஷேகத்துடன் திருவிழா நிறைவுபெறும்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரோஜாலிசுமதா, உதவி ஆணையர்கள் ராமசுப்பிரமணியன், கோமதி, கோயில் செயல் அலுவலர் மு. வள்ளிநாயகம், ஆய்வாளர் முத்துமாரியம்மாள், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வே. கண்ணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


