தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி, துறைமுக நிர்வாக அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசால் பல்வேறு துறைமுகங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து விதமான தனியார்மய நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். துறைமுகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின்படி, ஓய்வூதியப் பலன்களில் உள்ள நிலுவையில் இருக்கும் அனைத்துக் குறைபாடுகளையும் முறைப்படி சரி செய்து வழங்க வேண்டும்.
துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் முழுமையாக அமல்படுத்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்கத்தின் தலைவரும், மக்கள் மருத்துவருமான பி. சிவநாகரன் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் சிந்தாதுரை மற்றும் பொருளாளர் பாலசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
துறைமுகத்தின் முன்னாள் லேபர் டிரஸ்டிகளான ஜே.எம்.பி. ராயன், எம். கோபால், சி. ராமசாமி, சி. சுப்பிரமணியன், சங்க நிர்வாகிகள் என். ஈஸ்வரமூர்த்தி, பழனிசாமி, முனியசாமி, ஜெயபிரகாஷ் மற்றும் ராமநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கத் தலைவரும் துறைமுக டிரஸ்டியுமான எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் பொதுச்செயலாளர் கே. காசி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நிறைவாக துறைமுக முன்னாள் டிரஸ்டியும் நீர்வழிப் போக்குவரத்துக் கழகச் செயலாளருமான ஆர். ரசல் நிறைவுரையாற்றினார்.


