சாய் பல்லவி என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் பிறந்தார். இந்திய நடிகையும், நடனக் கலைஞருமான இவர் தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பொதுமக்களின் கவனத்தை இவர் ஈர்த்தார். பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார். தொலைக்காட்சியில் பிடா திரைப்படம் ஒளிபரப்பப்பட்டபோது தொலைக் காட்சிகளுக்கான தரவரிசையில் ஐந்தாவது முறையாக அதிகபட்ச இலக்கு அளவீட்டுப் புள்ளியை எட்ட இப்படம் காரணமாக இருந்தது.
தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் படுகர் குடும்பம் ஒன்றில் செந்தாமரை கண்ணன் மற்றும் ராதா கண்ணன் ஆகியோருக்கு மகளாக சாய் பல்லவி பிறந்தார். இவருடைய தங்கை பூஜா கண்ணனும் ஒரு திரைப்பட நடிகை ஆவார். இவரது சொந்த ஊர் நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி ஆகும். சாய் பல்லவி வளர்ந்தது, கல்வி கற்றது அனைத்தும் கோயம்புத்தூர் ஆகும்.கோயம்புத்தூர் இல் உள்ள அவிலா பெண்கள் கான்வென்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். சியார்சியாவில் திபிலீசி அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப் படிப்பை 2016 ல் முடித்தும் இந்தியாவில் மருத்துவராகப் பயிற்சி செய்ய இவர் பதிவு செய்யவில்லை. பின்னர் 31 ஆகத்து 2020 அன்று தன்னுடைய வெளிநாட்டு மருத்துவத் தேர்வை திருச்சியில் எழுதினார். இவருடைய தாய்மொழி படுக மொழி ஆகும், அதனைத் தவிர்த்து [தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சியார்சிய மொழி ஆகியவற்றில் புலமை பெற்று விளங்குகிறார். இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் பிரபலமடையத் தொடங்கிய பின்னர் தெலுங்கு மொழியிலும் நன்கு பேச கற்றுக்கொண்டார்


