சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணியின் பணி நிறைவுப் பாராட்டு விழா மற்றும் அவர் எழுதிய “நினைவோடும் வீதி” நூல் வெளியீட்டு விழா திருநெல்வேலி பாரதியார் தெரு லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடந்தது. நெல்லை குமார கபிலன் இலக்கிய அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் குமார சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பாரதியார் உலகப் பொதுச்சேவை நிதியம் செயலாளர் முனைவர் கோ. கணபதி சுப்பிரமணியன், திருநெல்வேலி திருவள்ளுவர்பேரவை அமைப்பாளர் கவிஞர் ந. ஜெயபாலன், தாமிரபரணி இலக்கிய மாமன்றம் தலைவர் தமிழ்ச்செம்மல் பாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார், லிட்டில் பிளவர் பள்ளி குழுமங்கள் தாளாளர் அ.மரியசூசை முதல் பிரதியினைப் பெற்றுக்கொண்டார். கவிஞர் ம.சக்தி வேலாயுதம் நூலை திறனாய்வு செய்தார். நிகழ்ச்சியை பிரபு தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நூலை வெளியிட்டு தமிழ்நாடு அரசின் மேனாள் அரசவை கவிஞர் கவிஞர் முத்துலிங்கம் சிறப்புரையாற்றினார். அந்த கூட்டத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கவிஞர் பாப்பாக்குடி செல்வமணியை பாராட்டி பேசியபோது, திரைப்பட பாடலாசிரியருக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார். அவர் பேசும் போது, “திரைப்பட கவிஞர் அவர்களே வைகை, கங்கை , காவிரியை பற்றி தங்களது முதல் திரைப்பட பாடலிலேயே பாடியுள்ளீர்கள். வற்றாத ஜீவநதியாக விளங்குவது எங்கள் தாமிரபரணி. பெருமைகள் பல கொண்டது எங்கள் தாமிரபரணி. இந்த நதியை பற்றி பெரும்பாலோருக்கு தெரியவில்லை. அதற்கு காரணம் திரைப்பட பாடலாசிரியர்கள் தாமிரபரணியை கொண்டாடமல் இருப்பதே . எனவே தாங்கள் வருங்காலத்தில் தாமிரபரணி புகழ் பாடும் வகையில் திரைப்பட பாடல் ஒன்றை எழுத வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
கவிஞர் முத்துலிங்கமும் ஆவண செய்வதாக வாக்களித்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள் , சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் பாப்பாக்குடி இரா.செல்வமணி ஏற்புரையாற்றினார். பர்கிட் மாநகரம் சுதாகார ஆய்வாளர் வி. முத்துராமன் நன்றி கூறினார்.
திருநெல்வேலியில் புத்தக வெளியிட்டு விழாவை மிகப்பிரமாண்டமாக தொடர்ந்து நடத்தி வரும் கவிஞர் பாப்பாக்குடி செல்வமணியை அனைவரும் பாராட்டினார்கள்.
&&


