போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்ததால், கோவில்பட்டியில் தற்காலிக ஊழியர்கள் மூலம் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. தொடர்ந்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினருடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடத்திய 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி இன்று வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பஸ்களை இயக்கும் வகையில், கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக மாற்று ஊழியர்கள் மூலம் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்கட்டமாக 21 தற்காலிக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் சண்முகம் தலைமையில் அதிகாரிகள், மாற்று டிரைவர்கள், கண்டக்டர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்தனர். மேலும் தகுதியான நபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, அரசு பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் வழக்கம்போல அரசு பஸ்கள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


