தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நல சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
கடந்த 145 வருடங்களாக தூத்துக்குடி-சென்னை இடையே முத்து நகர் ரயில் மட்டுமே தூத்துக்குடி நகர மக்களுக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த ரயிலில் எப்போதுமே காத்திருப்போர் பட்டியல் அதிகமாக காணப்படுகிறது. இந்த ரயிலில் ஆர்.ஏ.சியில் பயணம் செய்பவர்கள் ஆர்.ஏ.சி ஆக சென்னை வரை பயணம் செய்யக்கூடிய சூழ்நிலை நிலவிக் கொண்டே வருகிறது.
இதை தவிர்க்கும் பொருட்டு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஒரு வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; தூத்துக்குடி-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் தினசரி இயக்க வேண்டும். வண்டி எண். 16765-16766 தூத்துக்குடி- மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி வாரம் இரு முறை இயங்கும் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். வண்டி எண். 22101-22102 மதுரை லோக் மானயா திலக் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு நேரடி ரயில் இன்டர்சிட்டி இயக்க வேண்டும்.
வண்டி எண். 16791-16792 தூத்துக்குடி- பாலக்காடு, பாலக்காடு- தூத்துக்குடி பாலருவி விரைவு ரயிலில் ஒரு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியும், ஒரு இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டியும் இணைக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து வரும் புறப்படும் அனைத்து ரயில்களுக்கும் தூத்துக்குடி மேலூர் நிறுத்தம் வழங்க வேண்டும். இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க துணைத் தலைவர் எஸ். அந்தோணி முத்துராஜா, செயலாளர் மா. பிரம நாயகம், பொருளாளர் வே. லட்சுமணன், நிர்வாக செயலாளர் ஜே.ஏ.என் ஆனந்தன், உறுப்பினர் ஆர் ராஜமோகன் உடன் இருந்தனர்.


