தூத்துக்குடி சிவன் கோவில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவிலில் ஆண்டு தோறும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மகமை பரிபாலன சங்கம் அறக்கட்டளை சார்பில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 2ம் தேதி தொடங்கியது. இதை முன்னிட்டு கும்ப பூஜை அபிஷேகம் நடந்தது. பின்னர் யாகசாலை பூஜை உடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினசரி யாகசாலை பூஜை முடிந்தவுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது.
தினசரி மாலை சுப்பிரமணியசாமி ரத வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் சுப்ரமணியசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு கும்ப பூஜை 21 வகையான அபிஷேகங்கள் அதன்பின் தீபாரனை நடந்தது.
பின்னர், பகல் 12 மணிக்கு யாகசாலை பூஜை, பூர்ணாகதி கும்ப பூஜை, ஆறுமுக அர்ச்சனை நடந்தது மாலை 4 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் சுப்பிரமணிய சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதி வந்தார். கீழ ரத வீதியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுப்பிரமணிய சுவாமி, தாரகா சூரன் தலையை முதலில் வதம் செய்தார். பின்னர் இரண்டாவதாக சிங்கமுகன் சூரன் தலையை வதம் செய்தார்.
வேணுகோபால் வேடத்தில் வந்த சூரனை விரட்டி சென்றார். அதன்பின் வேணுகோபால் சூரன் சேவலாக மாறி முருகனை எதிர்நோக்கி வந்தார். சுப்பிரமணியசாமி அவரது தலையையும் வதம் செய்தார் சேவல் தலையை வெட்டியதும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று விண்ணை பிளக்கும் வகையில் கோஷங்களை எழுப்பி சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.
பின்னர் சூரசம்ஹாரம் முடிந்ததும் சுப்பிரமணிய சுவாமிக்கு தீபாரணை நடந்தது பக்தர்களுக்கு பானகாரம் வழங்கப்பட்டது. அதன் பின் விரதத்தை முடித்துக் கொண்டனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் சுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ரதவீதி சுற்றி வந்து சிவன் கோவிலை அடைந்தார். எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் அதன் பின்பு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மகமை பரிபாலன சங்க தலைவர் எஸ்.பிரமநாயகம், செயலாளர் எம்.எஸ்.எஸ்.கந்தப்பன், துணைத்தலைவர் ஏ.ராமலிங்கம், உதவி செயலாளர் எஸ்.தியாகராஜன் மற்றும் சிவன் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


