தூத்துக்குடியில் மீனவப் பெண்களுக்கான செவுள் வலை வடிவமைத்தல், பின்னல் மற்றும் வலைசீர் செய்தல் என்ற ஒரு வார கால உள்வாளகப் பயிற்சியின் துவக்கவிழா நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பம் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை ‘மீனவப் பெண்களுக்கான செவுள் வலை வடிவமைத்தல், பின்னல் மற்றும் வலை சீர்செய்தல் பற்றிய பயிற்சி என்ற ஒரு வார கால உள்வளாகப் பயிற்சியை 08.11.2023 முதல் 16.11.2023 வரை நடத்துகிறது.
இப்பயிற்சியானது சென்னை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியுதவியுடன் இலவசமாக நடத்தப்படுகிறது. இப்பயிற்சியின் துவக்கவிழாவானது 08.11.2023 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 30 மீனவப் பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற இருக்கிறார்கள்.
மீன்வளக் கல்லூரிமற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியர் மற்றும் பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்த. இரவிக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர்தம் சிறப்புரையில் வரும் காலங்களில் மீனவப் பெண்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார்.
விழாவிற்கு மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகத்தின் இயக்குனர் முனைவர் நீ.நீதிச்செல்வன் தலைமை தாங்கினார். அவர்தனது தலைமையுரையில் மீனவப் பெண்கள் மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலில் உதவும் வகையில் செவுள் வலைகளை உருவாக்குதல் மற்றும் கிழிந்த வலைகளைச் சீர்செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு மீன்பிடிச் செலவினங்களைக் குறைக்க வழிவகை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கான நுட்பங்கள் இப்பயிற்சியின்போது கொடுக்கப்படும் என்றும் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அலுவலகத்தின் உதவி இயக்குநர், ஏஞ்சல் விஜய நிர்மலா, தனது வாழ்த்துரையில் மீனவப் பெண்கள் அனைவரும் தொழில் முனைவோர்களாக ஆக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் ப. மோகன்ராஜ், தம் வாழ்த்துரையில் செவுள் வலை வடிவமைத்தல், பின்னல் மற்றும் வலை சீர்செய்தல் பற்றியபயிற்சி மீனவப் பெண்கள் சொந்தமாகத்தொழில் துவங்க உதவியாக இருக்கும் எனவும் இதுபோன்ற பயிற்சியை டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் சென்னை தமிழ்நாடுதிறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியுதவியுடன் நடத்துவது மீனவப் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதான அமையும் எனவும் கூறினார்.
மீன்பிடித் தொழில் நுட்பம் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் ச. மாரியப்பன் நன்றியுரை ஆற்றினார். அத்துறையின் உதவிப் பொறியாளர் அ. அந்தோணி மிக்கேல் பிரபாகர், முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் இ. தினேஷ்குமார், மு. வீரமணி மற்றும் செல்வி சூ. ஏமிமா ஆகியோர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர்.


