குலசை தசரா விழாவில் பக்தர்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தடுக்க கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவின் போது, பக்தர்களைப் புகைப்படம் மற்றும் ரீல்ஸ் என்ற பெயரில் வற்புறுத்தித் தொந்தரவு செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து முன்னணி நிர்வாகிக்ள அளித்துள்ள மனுவில் : “தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குலசேகரப்பட்டணம் தசரா திருவிழாவானது வரும் அக்டோபர் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாகத் தொடங்க உள்ளது.
தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, வேடமணிந்து முத்தாரம்மனைத் தரிசிக்க வருகை தருவர். இவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்களைப் புகைப்படம் எடுக்கிறோம், ரீல்ஸ் எடுக்கிறோம் என்ற பெயரில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சிலர் பக்தர்களைத் தொந்தரவு செய்வதோடு, கட்டாயப்படுத்தி ‘போஸ்’ கொடுக்கச் சொல்லி அதை எடுக்கும் சம்பவம் கடந்த சில ஆண்டுகளாகக் கோவில் வளாகத்திலும் சுற்று வட்டாரத்திலும் நடந்து வருகிறது.
இது பக்தர்களிடையே பெரும் எரிச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும், அவ்வாறு எடுக்கும் புகைப்படங்களைச் சில இணையதளங்களில் பல ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்றுப் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனும் செயல்பட்டு வருகின்றனர்.
எனவே, கோவில் வளாகத்திலும் தசரா நடைபெறும் இடங்களிலும் இதுபோன்று பக்தர்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பக்தர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநகர மாவட்டத் தலைவர் எஸ். இசக்கிமுத்து குமார், தூத்துக்குடி மாநகர மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலவேசம், முத்துகிருஷ்ணன், மண்டலத் தலைவர் பாலமுருகன் மற்றும் குலசை முத்தாரம்மன் தசரா குழுப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


