உயர்கல்வி பயிலுவதற்கு பொருளாதாரம், ஒரு தடையாக இருக்க கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (08.09.2025) நடைபெற்ற உயர்வுக்கு படி இரண்டாம் கட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையேற்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஊக்க உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது: அனைவருக்கும் வணக்கம்! தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றையதினம் உயர்வுக்கு படி இரண்டாவது கட்ட முகாம் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இந்நிகழ்விற்கு தூத்துக்குடி ஊரக, நகர் புறம் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டார வளமையங்களில் உள்ள 12 ஆம் வகுப்பு முடித்து உயர் கல்விக்கு சேராத மாணவர்களும், தேர்வு தவற விட்டு பின் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
உங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலைக்கல்லூரியின் பேராசிரியர்கள், தொழில்நுட்பக் கல்லூரியின் ஆசிரியர்கள், தொழில் கல்வியின் ஆசிரியர்கள், பாராமெடிக்கல் பேராசிரியர்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளின் பேராசிரியர்கள் அகியோர் இங்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு கல்லூரி பாடப்பிரிவின் முக்கியத்துவமும், வேலை வாய்ப்புகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.
எந்தெந்த பள்ளிகளில் அதிகமாக மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லாமல் இருக்கிறார்களோ அவர்களைப் பற்றிய தகவல்களை ஆசிரியர்கள் தெளிவாகவும், உத்வேகத்துடனும் செயல் புரிந்து அவர்களை உயர்கல்விக்கு சேர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். பொருளாதாரம், உயர்கல்வி பயிலுவதற்கு ஒரு தடையாக இருக்க கூடாது.
இதற்காக மாவட்ட நிர்வாகம், ஆசிரியர்கள் சங்கம், அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு உதவி செய்துள்ளது. தற்போது பாராமெடிக்கலில் தூத்துக்குடி மாணவர்களுக்கு 167 இடங்கள் உள்ளது என்றும், அதற்கான கல்வி பயில சேர்க்கை செய்ய நீங்கள் இன்றே விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
மேலும் வருகை புரிந்த அனைத்து துறை அலுவலர்களும் வருகின்ற காலங்களில் எந்தெந்த துறையில் சேர்ந்தால் பலன் அதிகம் உள்ளது என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு தரப்பட்ட வாய்ப்புகளை வீணடிக்காமல் இன்றே உயர்கல்வி பெற அவர்களை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்கள்.
இன்றையதினம் நடைபெற்ற இரண்டாவது முகாமில் ஏறத்தாழ 200க்கு அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், முதன்மை கல்வி அலுவலர் (பொ) து.சிதம்பரநாதன், கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள், அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


