தூத்துக்குடியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடியில், மீளவிட்டான் பஸ்ஸ்டாப் பின்புறம் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதைக் கண்டதும் அப்பகுதி மக்கள் சிப்காட் தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் போக்குவரத்து அலுவலர் லெ. புன்னவனக் கட்டி,ஏட்டு இசக்கிராஜன் மற்றும் தவசிராஜ், சக்திவேல், கணேசன் ஆகிய குழுவினர் விரைந்து வந்து நீர்த்தேக்க தொட்டிக்குள் இறங்கி ஆட்டினை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். ஆட்டினை எவ்வித காயமுமின்றி விரைவாக மீட்ட பணியாளர்களை மீளவிட்டான் ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


