தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.74 கோடியே 44 லட்சம் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக்குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தற்போது 4.48 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மே 2021-2022 மற்றும் 2022-2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 635 புதிய மகளிர் சுய உதவிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் 31.5.2023 வரை சுழல்நிதி கடனாக 516 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.77 லட்சத்து 40 ஆயிரம் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சமுதாய முதலீட்டு நிதியாக 796 குழுக்களுக்கு ரூ.661.80 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நலிவுற்ற தன்மை குறைப்பு நிதியின் கீழ், 154 பேருக்கு ரூ.38.50 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
வங்கிக்கடன் இணைப்பு நிதியாக 26 ஆயிரத்து 623 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1390.05 கோடி வங்கி கடன் பெற்று தரப்பட்டுள்ளது. வங்கி பெருங்கடன் வழங்குவதில் இதுவரை 49 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.18 கோடியே 69 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 420 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.74 கோடியே 44 லட்சம் கடன்தொகை தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் புதியதாக நகர்ப்புற பகுதிகளில் 548 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் குழு உறுப்பினர்கள் சுய தொழில் தொடங்க ஏதுவாக கடனுதவிகள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


