பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838 – ஏப்ரல் 8, 1894)ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார். இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.
பங்கிம் சந்திரர் 1838 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம்நாள் கொல்கத்தா அருகில் உள்ள கந்தலபாறை என்ற இடத்தில் பிராமணக் குடும்பத்தில் துர்கா சுந்தரி தேவி மற்றும் ஜாதவ் சந்திர சட்டோபாத்தியாயா என்ற தம்பதியரின் மூன்றாவது மகனாகப் பிறந்தார். ஜாதவ் சந்திரர் ஒரு துணை நீதிபதி. நற்பண்பு நிறைந்தவர். பங்கிமின் மூத்த சகோதரரான சஞ்சீவ் சந்திரா ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். அவருடைய பாலமோ என்ற வங்க மொழியில் எழுதப்பட்ட பயண நூல் முக்கியமான பயண நூல்களில் ஒன்று. பங்கிம் சந்திரர் வங்காளத்திலும் இந்தியாவில் நன்கறியப்பட்ட, ஓர் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராக, மிகப்பரவலாக அறியப்பட்டவராவார்.இவருடைய நாவல்கள், கருத்துக்கட்டுரைகள் ஆகியவை இந்திய மரபுமுறையான கட்டுப்பாடான எழுத்துப்போக்கினை உடைத்தெறிந்தது. இந்தியாவிற்கு வெளியேயும் இவரது எழுத்துக்கள் பிற எழுத்தாளர்களுக்கு ஒரு உத்வேகத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தின. அக்கால வழக்கப்படி அவருக்கு பதினொன்றாம் வயதில் ஐந்து வயது சிறுமி ஒருத்தியுடன் திருமணம் நடை பெற்றது. இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தார், 1859 இல் மனைவி இறந்தபிறகு பின்னர் அவர் ராஜலக்ஷ்மி தேவி என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகள்கள் இருந்தனர்.
உடல் நலக் கோளாறு காரணமாக அவர் தனது பணியிலிருந்து 1891 ஆம் வருடம் விருப்ப ஒய்வு பெற்றார்.அதன் பின்னர் ஆன்மிகத்தில் ஈடுபட்டார். 1894ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் நாள் தனது 56 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.


