தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழமை வாய்ந்த சிவகாமி அம்பாள் உடனுறை நடுநக்கர் மத்திய பதீஸ்வரர் திருக்கோயில்.
இக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் சுவாமி நடுநக்கர் மத்தியபதீஸ்வரர் சிம்ம வாகனம், ரிஷப வாகனம், இந்திர வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நடைபெற்றது.
ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 9 மணிக்கு சுவாமி அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளினர்.
காலை 10 மணிக்கு திருத்தேரை பாஜக சட்டமன்ற குழுத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், விருதுநகர் துணை ஆட்சியர் ராமசுந்தரி, முன்னாள் காவல்துறை தலைவர் மாசானமுத்து ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இந்த திருத்தேரோட்டத்தில் திருத்தேரானது 4 ரவீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் பக்தர்கள் தேரோட்டத்தில் தேங்காய் பழம் உடைத்து சுவாமியை வழிபட்டனர்.


