கலீலியோ கலிலி ( 15, பிப்ரவரி 1564 – 8, சனவரி 1642), ஓர் இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் ஆவார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். கலீலியோ “நோக்கு வானியலின் தந்தை”, “நவீன இயற்பியலின் தந்தை”, “நவீன அறிவியலின் தந்தை” என்று பலவாறாகப் பெருமையுடன் அழைக்கப்படுகிறார். தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களைக் கண்டுபிடித்தல், சூரியப்புள்ளிகளை நோக்குதல் மற்றும் ஆராய்தல் ஆகியவை நோக்கு வானியலுக்கு இவர் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும். கலீலியோ பயனுறு அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஈடுபட்டு, மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைகாட்டி உட்பட பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்.
கலீலியோ, இத்தாலியில் பிசா நகரில் 1564இல் பிறந்தார் புகழ்பெற்றிருந்த குழல் இசைக்கருவிக் கலைஞரும் இசையமைப்பாளருமான வின்சென்சோ கலிலி என்பவருக்கும் கியுலியா அம்மனாட்டிக்கும் ஆறு குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தார். குழல் இசையைத் தந்தையிடமிருந்து கற்றுத் தேர்ந்தார். தந்தையிடமிருந்தே மேலும் நிறுவப்பட்டிருந்த கோட்பாடுகள் மீதான ஐயங்கள், நன்கு வரையறுக்கப்பட்ட சோதனை முடிவுகளின் மதிப்பு, கணிதமும் சோதனையும் இணைந்து உருவாக்கும் முடிவுகள் ஆகியவற்றின் மீது பிடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.
கலீலியோவுடன் பிறந்த ஐவரில் மூவரே இளவயதைத் தாண்டினர். மிகவும் இளையவரான மைக்கேலேஞ்சலோ குழல் வாசிப்பதில் திறமை பெற்றிருந்தார்; இவரே கலீலியோவின் இளமைக் காலத்து நிதிச் சுமைப் பிரச்சினைகளுக்குக் காரணமாகவிருந்தார். தனது தந்தை உறுதியளித்திருந்த வரதட்சணையை மைக்கேலேஞ்சலோ தனது மனைவி குடும்பத்தாருக்குக் கொடுக்க இயலாது சட்ட வழக்குகளைச் சந்தித்தார். தவிரவும் தனது இசை முயற்சிகளுக்கும் சுற்றுலாக்களுக்கும் கலீலியோவிடம் கடன் கேட்டவண்ணம் இருந்தார். இந்த நிதித் தேவையே கலீலியோவை புத்தக்கங்களை உருவாக்கி கூடுதல் வருவாய் ஈட்ட உந்துதலாக இருந்திருக்க வேண்டும்.
கலீலியோ எட்டாண்டுகள் இருந்தபோது இவரது குடும்பம் புளோரன்சிற்குக் குடிபெயர்ந்த போது, யகோபோ போர்கினியிடம் இரண்டாண்டுகள் விட்டுச் செல்லப்பட்டார். பின்னர் புளோரன்சிலிருந்து தென்கிழக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள வல்லம்புரோசாவில் கமல்டோலெசு துறவியர்மடத்தில் கல்வி கற்றார்.


