சோ ராமசாமி அக்டோபர் 5, 1934 – டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் எனப் பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என அழைக்கப்பட்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் ‘அரசியல் நையாண்டி’ எழுத்துகள் இவருக்குப் ‘பத்திரிக்கை உலகில்’ தனி இடம் வகுத்துத் தந்தது.
சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயராகும்.
கலையுலகம்
1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.
இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். மிஸ்டர் சம்பத், முகமது பின் துக்ளக், யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலையென்ன ஆகிய நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.


