தூத்துக்குடியில் திமுக சார்பில் நடைபெற இருந்த மருத்துவ முகாம், கைப்பந்து போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெறுவதாக இருந்த மின்னொளி கைப்பந்து போட்டி, இலவச பொது மருத்துவ முகாம், மாவட்ட செயற்குழு கூட்டம் ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளும் தவிர்க்க முடியாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் வடக்கு மாவட்ட, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான ஆண்கள் பெண்கள் மின்னொளி கைப்பந்து போட்டி 08.12.2023 மாலை முதல் 10.12.2023 வரை தெர்மல்நகர் கைப்பந்து மைதானத்தில் வைத்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை மற்றும் சென்னை கற்பகவிநாயகா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவமுகாம் 10.12.2023 அன்று S.A.V ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்துநடைபெறுவதாக இருந்தது.
மேலும் டிசம்பர் 17 -ல் சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி 2- வது மாநில மாநாட்டில் கலந்து கொள்வது குறித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் 10.12.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் வைத்து நடைபெறுவதாக இருந்தது.
அண்மையில் மிக்ஜாம் புயலால் சென்னையில் பாதிப்படைந்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்வதற்காக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் என்னுடைய தலைமையில் சென்றிருப்பதால் மேலேகண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் வேறோரு தேதியில் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.


