திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் காண இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது.
12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருவார்.
அங்கு முதலில் சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகன், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதையொட்டி சூரசம்ஹாரத்தை காண்பதற்கு லட்சக்கணக்கானோர் அதிகாலை முதலே கோயில் வளாகத்தை நோக்கி வந்துள்ள வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு கடற்கரைகளில் காத்திருக்கின்றனர்.
சூரசம்ஹாரத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இன்று பிற்பகல் சுமார் 6 லட்சம் பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக திரண்டிருந்தனர்.
பாதுகாப்பிற்கு 4500 போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு காமிரா மூலம் பக்தர்களை கண்காணித்து வருகின்றனர். கடலில் புனித நீராடும் பக்தர்கள் வசதிக்காக கடலோர பாதுகாப்பு குழுமம் போலிசார் டி.எஸ்.பி. பிரதாபன் தலைமையில் 90 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கு புறநகர் பகுதிகளில் 9 இடங்களில் சுமார் 7000 வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் காவல்துறை சார்பில், தயார் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்துவதற்கு திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் மற்றும் அதன் அருகில் தற்காலிக பஸ் நிறுத்து மிடம் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்துவதற்கு வீரபாண்டியன் பட்டினம் அருகே உள்ள ஜே.ஜே. நகர், அரசு தொழிற்பெயர்ச்சி நிலையம், சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அருகில் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப் பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி செல்லக்கூடிய பஸ்கள் நிறுத்துவதற்கு திருச்செந்தூர் நெல்லை சாலையில் அன்பு நகர், மற்றும் அரசு டாஸ்மாக் அருகில் சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்துவதற்கு 2 இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி நாகர்கோவில் செல்லக்கூடிய பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்து வதற்கு பரமன்குறிச்சி சாலையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம் குடோன் அருகிலும் ஆம்னி பஸ்களுக்கும், தற்காலிக பஸ்கள் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
காவல் உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், தற்காலிக பஸ் நிலையங்கள், கழிப்பறைகள், பொது மக்களுக்கான நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றுப பாதைகள், வழித்தடங்கள் பற்றிய அத்தியாவசியத் தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எளிதாக இணையதளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் கியூ ஆர் கோடு மற்றும் லிங்க் மூலம் பெறும் வசதியை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் அவசர உதவிகளுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் ஆய்வாளர் ஆகியோரின் தொலைபேசி எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.