தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளா் பணிக்கான உடல் தகுதித்தோ்வுக்கான ஆலோசனைக் கூட்டம் தருவை மைதானத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் நடத்திய 2023ஆம் ஆண்டுக்கான நேரடி உதவி ஆய்வாளா் பதவிக்கான தோ்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 26, 27 தேதிகளில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் துறை சாா்ந்த ஒதுக்கீட்டில் தோ்ச்சி பெற்ற 99 போ் மற்றும் பொது ஒதுக்கீட்டில் தோ்ச்சி பெற்ற 371 போ் என மொத்தம் 470 ஆண் விண்ணப்பதாரா்களுக்கு தூத்துக்குடி தருவை மைதானத்தில் (நவ.7) உடற் தகுதி தோ்வும், 8ஆம் தேதி உடற் திறனாய்வு தோ்வும் நடைபெறவுள்ளது.
இத்தோ்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டம், தோ்வுக்கான ஒத்திகை தருவை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவா் எம். துரை தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் முன்னிலை வகித்தாா்.இக்கூட்டத்தில் காவல்துறையினா் மற்றும் காவல்துறை அமைச்சு பணியாளா்கள் தோ்வு மைதானத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறை துணைத் தலைவா் அறிவுரை வழங்கினாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், தென்காசி மாவட்ட சைபா் குற்றப்பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் தன்ராஜ்கணேஷ், தூத்துக்குடி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ், திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் தனுசியா, தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் புருஷோத்தமன் மற்றும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட காவல் துறையினா், காவல்துறை அமைச்சுப் பணியாளா்கள் பங்கேற்றனா்.


