தூத்துக்குடியில், வீட்டின் முன் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் வாலிபரை தாக்கி கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அண்ணா நகர் 12வது தெரு மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மாரியப்பன் (21), இவரது வீட்டு முன்பு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் மகாராஜன் (21) என்பவர் நண்பர்களுடன் மது அருந்தினாராம். இதனை மாரியப்பன் கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு மாரியப்பன் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மகாராஜன் அவரிடம் தகராறு செய்து அவரை தாக்கினாராம். மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த அவரது கார் கண்ணாடிகளை உடைத்து காரை சேதப்படுத்தினாராம்.
இதில் காயம் அடைந்த மாரியப்பன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து மகாராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


