திருச்செந்தூரில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் விஜயதசமியை முன்னிட்டு நேற்று அணி வகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தொண்டர்கள் சீருடையில் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் விஜயதசமியை முன்னிட்டு நேற்று மாலையில் திருச்செந்தூர் மையிலப்பபுரம் தெருவில் இருந்து அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. மாசானமுத்து தலைமை தாங்கினார்.
இந்த ஊர்வலம் உள்மாட வீதி, பந்தல் மண்டபம், சன்னதி தெரு, பள்ளத்தெரு, சபாபதிபுரம் தெரு, புளியடித்தெரு, தாலுகா ஆபீஸ் ரோடு, நாடார் தெரு, சலவையாளர் தெரு, வெயிலுகந்தம்மன் கோவில் தெரு, ஜீவாநகர், பட்டர்குளம் தெரு வழியாக கல்யாணசுந்தரம் விநாயகர் கோவில் தெருவை சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில் சுமார் 200 தொண்டர்கள் சீருடையில் பங்கேற்றனர்.
பின்னர் கல்யாணசுந்தரம் விநாயகர் கோவில் தெருவில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, நகர தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். ராஷ்ட்ரிய சேவா பாரதி அகில பாரத பொறுப்பாளர் பத்மகுமார் ‘தற்கால சூழலில் ஹிந்துத்துவா’ என்ற புத்தகத்தை வெளியிட்டு, சிறப்புரையாற்றினார்.
இந்த ஊர்வலம், பொதுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் துணை கண்காணிப்பாளர்கள் வசந்தராஜ் (திருச்செந்தூர்), ராமகிருஷ்ணன் (ஸ்ரீவைகுண்டம்) ஆகியோர் மேற்பார்வையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


