அமெரிக்காவில் செவிலியர் வேலை வாங்கி தருவதாகப் பெண்ணிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தைச் சேர்ந்தவர் பாப்சிதா பீரிஸ் (42). இவர் வெளிநாட்டில் செவிலியராக பணியாற்றுவதற்காக இணையதளத்தில் வேலை தேடி உள்ளார். அப்போது ஒரு முகநூல் பக்கத்தில் அமெரிக்காவில் செவிலியர் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக ஒரு விளம்பரம் வந்து உள்ளது. அதனைப் பார்த்த பாப்சிதா பீரிஷ், அந்த விளம்பரத்திலிருந்த கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது ஜீன் என்பவர் பேசி உள்ளார். அப்போது அவர் ரூ.35 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டாராம்.
தொடர்ந்து அவர், அந்த மருத்துவமனையின் மேலாளர் ஜார்ஜ் கென்னடி மற்றும் முகவர் அகமது ராஜேஷ் என்று கூறி 2 பேரை அறிமுகம் செய்து உள்ளார். அவர்கள், விசா உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்குத் தேவைப்படுவதாக ரூ.10 லட்சத்து 65 ஆயிரம் பணத்தை இணையம் மூலம் பெற்று உள்ளனர். ஆனால் அவர்கள் ஓராண்டுக்கு மேலாகியும் பாப்சிதா பீரிசுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாப்சிதா பீரிஷ் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் சிவசங்கரன், ஜீன், ஜார்ஜ் கென்னடி, அகமது ராஜேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


