திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாளான நேற்று, சுவாமி சண்முகர் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களின் முக்கிய நிகழ்வாக, 7-ஆம் திருநாளான நேற்று மாலை 4 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி – தெய்வானை அம்பாள்களுடன் தங்கச் சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளினார்.
பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில் சிவன் அம்சமாகக் காட்சி அளித்தவாறு, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் 8-ஆம் நாளான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று பகல் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிறப் பட்டு அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளி வீதி உலா வருகிறார். மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளிக் குதிரை வாகனங்களில் எழுந்தருளி வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தும் நிகழ்வு நடைபெறுகிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை): இரவு சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி தேர் கடாட்சம் அருளுகின்றனர்.
புதன்கிழமை (செப்டம்பர் 9): ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிகர நிகழ்ச்சியாகக் காலை 7 மணிக்குத் தேரோட்டம் நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான விரிவான பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு ஏற்பாடுகளைத் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றன.


