தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள், வாக்கிங் செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
தூத்துக்குடி நகரின் முக்கிய பொழுது போக்கு இடமாக முத்துநகர் கடற்கரை பூங்கா, ரோச் பூங்கா ஆகியவை உள்ளன. இங்கு பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து பொழுதை கழித்து வருகின்றனர். தினமும் நூற்றுக் கணக்கானோர் காலை மாலை வேளைகளில் வாங்கிங் செல்ல பயன்படுத்தி வருகின்றனர். இந்த பூங்காக்களில் தற்போது நாய் தொல்லை அதிகரித்துள்ளது. 50க்கும் மேற்பட்ட நாய்கள் பூங்காவில் சுற்றித் திரிகின்றன.
இதனால், பூங்காவுக்கு வரும் மக்கள் ஒருவித அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டமாக வரும் நாய்களை கண்டு பயந்து ஓடும்போது கீழே விழுந்து காயமடைகின்றனர். நாய்கள் ஒன்றுக்கு ஒன்று சண்டையிட்டு கொண்டு ஓடுவதால், குழந்தைகள் விளையாட முடிவதில்லை. இரவு நேரங்களில், வெளிச்சம் இல்லாத பகுதியில் செல்லும் மக்களையும் துரத்தி கடிக்கின்றன. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


