கயத்தாறு அருகே வீடு புகுந்து திருட முயன்றதாக இளைஞரை போலீசார் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறையடுத்த மானங்காத்தான் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சையது ராவுத்தா் மகன் அசன் மைதீன்(54). பாய் தயாரிக்கும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வரும் இவா், இவரது குடும்பத்தினா் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா்களாம்.
அப்போது பீரோவை திறக்கும் சத்தத்தை கேட்டு எழுந்து பாா்த்த போது மா்ம நபா் ஒருவா் வீட்டில் இருந்து தப்பியோடினாராம். அப்போது அவரிடமிருந்த கைப்பேசி கீழே விழுந்துவிட்டதாம். இதையடுத்து கைப்பேசியை கயத்தாறு காவல் நிலையத்தில் அசன் மைதீன் ஒப்படைத்து, புகாா் அளித்தாராம். போலீசார் வழக்குப் பதிந்து வீடு புகுந்து திருட முயன்ற அதே பகுதி நடுத்தெருவைச் சோ்ந்த பீா் மைதீன் மகன் அப்துல் ரஜிமை(23) நேற்று கைது செய்தனா்.


