நமது வாழ்வில் ஒரு முறையாவது காசி யாத்திரை சென்று வர வேண்டும் என்று விரும்புவார்கள் பலர். வட காசி திருத்தலத்தில் சிவபெருமான் விஸ்வநாதராக எழுந்தருளியுள்ளார். அவரை வணங்கி நிற்பதே பெரும் பாக்கியம். காசியில் இறந்தால் முக்தியென்றும் அங்கு இறப்பவர்களின் காதுகளில் ராம நாமத்தை சிவபெருமான் ஓதுவதாகவும் ஐதீகம் உள்ளது. காசிக்கு செல்லும் மன்னர்கள் அங்கு கங்கையாற்றில் சுயம்புவாகக் கிடைக்கும் பாணலிங்கங்களை எடுத்து வந்து, தங்களது ஊர்களில் பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதராக வழிபடுவது வழக்கம். அந்த அளவுக்கு காசி மீது பற்று அதிகம். காசிக்கு செல்ல முடியாதவர்கள் தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் தரிசனம் செய்யும் அற்புத தலம் தென்காசி காசி விஸ்வநாதர் தலமாகும்.

தென்காசி மாவட்டம், திருக்குற்றால மலைச்சாரலில் சித்திரா நதிக்கரையில் உள்ள தென்காசியில் உலகம்மன் சமேத காசி விஸ்வதநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அரிகேசரி பராக்கிரம பாண்டிய மன்னன் 1467ம் ஆண்டு இந்தக் கோயிலை நிர்மானித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
தென்காசியை ஆண்ட மன்னன் பராக்கிரம பாண்டியன் நாள்தோறும் காசிக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு வர விரும்பினான். அவன் எப்போதும் வழிபடும் முருகப்பெருமான் அவனது கனவில் ஒருநாள் தோன்றி ‘கனக குளிகையை’ அவன் கையில் கொடுக்க அதை அவன் வாயிலிட்டுக் கொண்டு, பிறர் கண்களிலிருந்து மறைந்து தினமும் வான் வழியாக பறந்து சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு விட்டு சூரியன் உதிக்கும் முன்பு ஊர் திரும்புவது வழக்கம்.
ஒரு நாள் தனது மனைவியுடன் பாண்டிய மன்னரும் காசிக்கு சென்று வணங்கி விட்டு , அங்கிருந்து லிங்கத்தினை எடுத்து அரண்மனை நோக்கி வந்தனர். வரும் வழியில் சோலை ஒன்றில் இளைப்பாரும் போது, அங்கே வைத்த லிங்கத்தை எடுக்க இயலாது. எனவே இறைவன் ஆணைப்படி அந்த லிங்கத்தினை அவ்விடத்தில் பிரதிட்சை செய்தனர். அவ்விடம் சிவகாசி என்றழைக்கப்படுகிறது. அரண்மனைக்கு வந்த மன்னர், தனது இருப்பிடத்தில் சிவனை பிரதிட்சை செய்ய லிங்கம் வேண்டுமே என வணங்கி நின்றான். கனவில் இறைவன் தோன்றி தாம் இருக்கும் இடத்தினை கூறி மறைந்தார். அதன் படி காலையில் கோட்டையில் இருந்து கட்டெறும்பு ஊர்ந்துசென்றது. அந்த எறும்பு சிற்றாறற்றின் கரையில் உள்ள செண்பகத் தோடடத்தில் நின்றது. அங்கு சிவலிங்கமும், நந்தியும் இருக்கும் தெய்வீக காட்சியை கண்டார். அவ்விடத்தில் கோயிலை கட்டினார்.

பராக்கிரம மன்னன் காசியில் கங்கை வடக்கிருந்து தெற்காக ஓடுவது போல இங்குள்ள சிற்றாறு ஓட வேண்டும் என இந்த நதியை தென்காசியில் வடக்கிருந்து தெற்காக வெட்டி ஓட விட்டான் .
ஊருக்குத் தென்காசி என்று பெயரிட்டான்.
வடகாசியை விட தென்காசி புனிதமானது. ‘காசியில் இறந்தால் தான் முக்தி. ஆனால், தென்காசியில் பிறந்தாலும் இறந்தாலும் முக்தி’ என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தச் சிவாலயம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் சகாப்தம் 1369 க்குப் பிறகு ஆனி மாதம் 13ம் நாள் சனிக்கிழமை இரவு மீன லக்னத்தில் கருவறையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினர் இந்த நாளை 10.6.1467 என்று கணித்து கூறியுள்ளனர்.
கோயில் நந்தி மண்டபம், முன் மண்டபம், மகாமண்டபம் ஆகியவை கலைக்கூடங்கள் என்று சொல்லுமளவுக்குக் கடவுள்களின் திருவுருவங்கள், விலங்குகள், பறவைகள் என கவின்மிகு சிற்பங்களால் நிரம்பி வழிகின்றன. சைவமும் வைணவமும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் விதமாக இங்குள்ள தூண்களில் திருமாலின் அவதார சிற்பங்கள், அனுமன் திருவுருவங்களைக் காணலாம். வடக்கு பிரகாரத்தில் பராக்கிரம பாண்டியன் அமைத்த காசி கிணறு வற்றாமல், இன்றும் சுரந்து கொண்டேயிருக்கிறது. கங்கையை நினைவு கூறும் வகையில் அவன் இந்தக் கிணற்றை அமைத்ததாக கூறுவதுண்டு.
கருவறைக்குள் காசி விஸ்வநாதர் போன்றே லிங்க வடிவில் காட்சியளிக்கும் பெருமானைத் தனது கோட்டையிலிருந்து பார்த்து வழிபட ஏதுவாக கோட்டையில் சில ஏற்பாடுகளை மன்னன் அமைத்திருந்தான். தற்போது இப்பகுதி மேட்டுத் தெரு என அழைக்கப்படுகிறது. இன்றும் நாம் காசி விஸ்வநாதரை இங்கிருந்து தரிசிக்க முடியும். தனி சன்னதியில் இறைவி உலகம்மை அருள் பொலியும் திருமுகத்துடன் வலக்கையில் தாமரை மலர், கிளி ஏந்தி இடக்கையைத் தொங்கவிட்டு பத்ம பீடத்தில் அணிகலன்களுடன் நின்ற நிலையில் எழில் ததும்ப அருள்பாலிக்கிறார்.

காசி விஸ்வநாதருக்கும் உலகம்மைக்கும் பெருங்கோயிலை எடுத்த பராக்கிரம பாண்டியன், ‘இக்கோயில் இறைவன் அருளால் என்றும் நிலைத்து நிற்கும். ஆயினும் ஒரு வேளை பழுதுபட்டால் அந்த சிதைவுகளை அகற்றி செப்பனிடுபவர்களின் திருவடியில் உலகத்தார் முன்னிலையில் விழுந்து வணங்குவேன் என்றும் இக்கோயிலை விருத்தி செய்வோரின் திருவடியிலும் என் திருமுடியைத் தாழ்த்தி இறைஞ்சுவேன் என்றும் கல்வெட்டில் உருக்கத்துடன் பொறித்து வைத்துள்ளான்.
ஒன்பது நிலையுடன் கூடிய பெரிய ராஜகோபுரம் தொல்லியலாளரின் ஆய்வுப்படி 3.11.1457ல் கால்கோளிடப்பட்டு பின்னர் வந்த மன்னர் பொன்னின் பெருமாள் அழகன் குலசேகரன் என்பவரால் 1518ல் கோபுரப்பணி நிறைவு பெற்றதாகக் கூறப்படுகிறது. 9 நிலை ராஜகோபுரம் 136 அடி நீளம் 95 அடி அகலம் 178 அடி பிரமாண்ட உயரத்துடன் 800 சிற்பங்கள் 11 கலசங்களுடன் விணணுயர நிற்க் கோபுரம் தமிழ்நாட்டின் ஆறாவது பெரிய கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவனது காலத்திற்குப் பிறகு அப்பகுதி சேர மன்னர்களின் வசமாயிற்று. சேர மன்னன் உதய மார்த்தாண்ட வர்மன் தென்காசி கோயில் மற்றும் கோபுரத் திருப்பணிகளைச் செய்து 1524ல் குடமுழுக்கு செய்துள்ளான். அதன் பிறகு 1792&1824க்குள் பாளையக்காரர்கள் வெள்ளையர்களின் ஆவணங்களை அழிப்பதற்காக வைத்த நெருப்பு, கோபுரத்தை அழித்து விட்டதாகக் கூறப்படுகிறது. பெருமழை பொழிந்த போது பேரிடி விழுந்து கோபுரம் அழிந்ததாகவும் கூறுவதுண்டு.
இதையடுத்து 150 ஆண்டுகளுக்கு பிறகு அய்யா சிவந்தி ஆதித்தன் தலைமையில் திருப்பணி குழு அமைக்கப்பட்டு வானளாவிய உயரத்துக்கு ராஜகோபுரம் அமைத்து சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு குடமுழுக்கு25.06.1990 ல் நடைபெற்றது. 16 ஆண்டுகள் கழிதது 17.03.2006 அன்று மீண்டும் சிவந்தி ஆதித்தன் தலைமையில் கும்பாபிசேகம் நடந்தது. தற்போது வருகிற 7.04.2025 கும்பாபிசேகம் நடைபெற உள்ளது.
தற்போதைய ராஜகோபுரத்தில் 800 அழகிய சுதைச் சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த ஆலயத்தினை திருமுழுக்கு செய்த சிவந்தி ஆதித்தன் அவர்களை இரண்டாம் பரக்கிரமபாண்டியன் என்றழைக்கிறார்கள். ஆறு கால பூஜை நடக்கும் இக்கோயிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம், ஐப்பசியில் திருக்கல்யாண திருவிழா, ஆவணி மூலம், தெப்பத்திருவிழாக்கள் நடைபெறுகின்றன. மாசி மாத பிரம்மோற்சவத்தை ஆரம்பித்து வைத்தவன் பராக்கிரம பாண்டியன் என்பதால் இன்றம் முதல் மரியாதை அவனுக்கே வழங்கப்படுகிறது.

சுவாமியின் பெயர் அருள்மிகு காசி விசுவநாதர், அம்பாள் பெயர் உலகம்மை, இங்குள்ள தீர்த்தம் சித்திர கங்கை என்னும் சிற்றாறு, காசி தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், ஆனந்த தீர்த்தம். இங்குள்ள தல விருட்சம் செண்பக மரம், பலா மரம்.
இங்குள்ள திருவோலக்க மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவர், மகாதாண்டவர், ரதிதேவி , அக்னி வீரபத்திரர், வீரபத்திரர், மன்மதன், வேணுகோபாலன், காளி நடனம், திலகமிடும் நங்கை போன்ற பெரிய சிற்பங்கள் நட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் கண்ணைக்கவரும் சிற்பங்கள் பார்ப்போர் மனதை கொள்ளை கொள்ள செய்யும். இரண்டு வீரபத்திரர்கள், இரண்டு தாண்டவமூர்த்திகள், இரண்டு தமிழணங்கு என்னும் தமிழன்னை, இரண்டு தல மரங்களான செண்பகமரம், பலாமரம் கோயில் வளாகத்தில் இருப்பது மிகச்சிறப்பாகும்.
இந்த ஆலயத்தில் மிக சிறப்பு என்னவென்றால் கோயில் ராஜகோபுரத்துக்குள் நுழையும் போது, சுவாமி அம்பாளை வணங்கி விட்டு வெளியே வரும் போதும் சுழற்றி அடிக்கும் பொதிகை தென்றல் காற்றும் பக்தர்கள் முகத்தில் வீசியடிப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். சிவபெருமானே தென்றலாய் வந்து நமது முகத்தில் தீண்டி ஆசிர்வதித்து செல்கிறார் என் பக்தர்கள் நம்புகிறார்கள்.
இந்த ஆலயத்தினை திருசிற்றம்பல கவிராயர் எழுதிய தலபுராணம், காசி கலியன் எழுதிய வாள் மங்கலம், வேம்பத்தூர் சர்க்கரை பாரதி பாடிய தென்காசி உலகம்பிகை பதிகம், மேலகரம் கவிஞர் முத்துராமன் பாடிய உலகம்மை பிள்ளை தமிழ், சித்தாந்தம் ரத்தினம் சி. சதாசிவம் பாடிய தென்காசி பதிகம் போன்ற பழமையான ஏடுகளில் காணலாம்.

ஆடி ஆமாவாசைக் கட்டளை , விழா பூசைக்கட்டளை சாயரட்சை கட்டளை , அர்த்த சாம க்கட்டளை இங்கு மிகச்சிறப்பானதாகும்.
உலகம்மை இந்த தலத்தில்தோன்றியவள் என்பதாகுவும் குலசேகர மன்னனின் மகளாய் வளர்ந்தவள் என்பதாலும் சிறப்பு பெற்றவள். இங்கு உலகம்மை சமேத விஸவநாதரை வணங்கி நின்றால் வேண்டும் வரம் கிடைக்கும் , மாங்கல்ய பாக்கியம், குழந்தை வரம், நாள்பட்ட நோய் தீருதல், அரசு வேலை, சிறந்த கல்வி கிட்டும்.
இங்கு செல்ல சென்னை நெல்லை, திருவனந்தபுரம், மதுரை, சங்கரன்கோவில் உள்பட பல முக்கிய இடங்களில் இருந்து பஸ் வசதி மற்றும் ரயில் வசதியும் உள்ளது. தென்காசி பஸ் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் உள்ளது. ஆட்டோ மூலமும் செல்லலாம்.
நடை திறந்து இருக்கும் நேரம். காலை 6 முதல் 12 மணி, மாலை 4 முதல் 8 மணி


