நிவேக்கை பற்றி ஏற்கனவே நான் முன்பகுதியில் கூறியுள்ளேன். இவர் கோபால சமுத்திரத்தில் சமூக பணியாற்றி வருபவர். தாமிரபரணி கரையில் பாளையங்கால்வாய் கரையை சுத்தப்படுத்தி பனமரங்கள் நடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருபவர். அவருடைய நண்பர் சபரி நாதன்.
சபரி நாதன், கோபால சமுத்திரத்தில் இருந்து மற்றொரு வழியாக காட்டுக்குள் எங்களை எதிர்பார்த்து காத்து இருக்கிறார். அவர் அங்கே காத்து இருக்கட்டும் என்று முடிவு செய்து விட்டு நாங்கள் நிவேக் அவர்களை அழைத்துக் கொண்டு தருவையில் ஐந்து கண் மடைக்கு சென்றோம். இதுவரை எனக்கு உதவி செய்து கொண்டிருந்த மந்திரி அவர்கள், “கொஞ்சம் வேலை இருக்கிறது” என கிளம்பிவிட்டார்கள். எனவே நிவேக் உதவியுடன் பயணித் தோம்.
பாளையங்கால்வாயை பச்சையாற்றங்கரையில் விடுவதற்காக பல்வேறு தொழில் நுட்பங்கள் நமது முன்னோர்கள் பயன்படுத் தியுள்ளார்கள். இதற்கு சம்பந்தமாக ஒரு செவிவழிகதைகூறப்படுகிறது. இந்த கதைக்கு சுவடு ஒன்றும் உள்ளது. கோபால சமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோயில் அருகில் உள்ள கைப்பத்து என்னும் இடத்தில் உள்ள சிவிலி மகராஜா கோயில் தான் அந்த சுவடு. இந்த கோயிலில் பேசப்படும் கதை பாளையங் கால்வாயில் இந்த அணைக்கட்டு கட்டப்படும் போது நடந்த வரலாற்றை நமக்கு செவி வழியாக கூறுகிறது.
இந்த இடத்துக்கும் எங்களை நிவேக் கூட்டிச்சென்றார்.அவர் கூட்டிச்சென்ற வரலாற்றை முதலில் கூறுவோம். அதன் பிறகு தருவை தடுப்பணை குறித்து நிறைய பேசுவோம்.
தருவை ஊருக்குள் வந்து, அங்கு பாளையங்கால்வாய் பாலத்தினை கடந்து, பச்சையாற்றில் போடப்பட்ட தாம்போதி பாலத் தினை கடந்து, குட்டி பாளையங் கால்வாய் கரை வழியாக நாங்கள் அந்த இடத்துக்கு சுமார் 3 கிலோ மீட்டர் பயணம் செய்தோம்.
ஒரு அணையை கட்டுவதற்கு முன்பு வெள்ளத்தை தடுக்க முன்னேற்படாக எத்தனை நடவடிக்கை எடுத்துள்ளார்கள் நமது முன்னோர்கள். நாம் சென்ற கொண்டிருக்கும் சாலை முடியும் இடத்தில் கைப்பத்து என்னும் இடத்தில் ஒரு வடிகால் உள்ளது. இந்த வடிகாலும் பாளையங்கால்வாய், பச்சையாற்றை கடக்கும் இடத்திற்கான முன்னேற் படாக செய்யப்பட்ட தொழில் நுட்பமாகும். இந்த வடிகாலில் பாளையங்கால்வாயில் வரும் கூடுதல் தண்ணீர் குறைக்கப்படுகிறது. இதனால் அங்கேயே அதன் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்காக வடிகால் அமைத்து ள்ளார்கள். அதை தொடர்ந்து கைப்பத்து என்னும் வயல்வெளிகள் பாசனத் துக்காக தனிக்கால்வாயை பாளையங் கால்வாயில் இருந்து கிளை பாளையங்கால்வாயாக பிரிக் கிறார்கள். இந்தகால்வாய் சிறிது தூரம் ஓடி அங்குள்ள வயற்காட்டை செழிப்படைய செய்துவிட்டு, மீண்டும் பச்சையாற்றில் விழுந்து விடுகிறது.
கிட்டத்தட்ட பாளையங்கால்வாய் வேகத்தினை, இந்த குறுங்கால்வாய் குறைத்த பின்பே இந்த கால்வாய் பச்சையாற்றுக்கு வந்து சேருகிறது. ஆகா. தண்ணீரை எந்த அளவுக்கு நமது முன்னோர்கள் பயன்படுத் தியிருக்கிறார்கள்.
இந்த வேளையில் தான் சிபிலி மகராஜா கதையை கூறலாம் என நினைக்கிறேன். அவரின் கதை ஒரு சோக கதை. ஆனால் தொடர்ந்து பாளையங்கால்வாய் இந்த அளவுக்கு நூற்றாண்டை கடந்து பேசப்படுகிறது என்றால் அதற்கு அவரும் ஒரு காரணமாவார்.
இந்த அணைக்கட்டு கட்டும் போது நடந்த சம்பவம் என கூறப்படுகிறது. கைப்பத்து வயற் காட்டுக்கு தண்ணீர் கொடுக்கும் மடை கட்டும் போது கரை உடைந்து கொண்டே இருந்தது. அந்த சமயத்தில் அங்குள்ள சோதிடர் ஒருவரிடம் சென்று மக்கள் குறி கேட்டு உள்ளார்கள். அப்போது அவர் “அந்த இடத்தில் ஒரு நரபலி கொடுங்கள். அப்படி நரபலி கொடுத்தால் மட்டுமே கரை நிற்கும்” என்று கூறியுள்ளார்.
நரபலி என்பது அங்குள்ள மனிதர் ஒருவரை அந்த இடத்தில் உயிரோடு பலி கொடுப்பதாகும். பல இடங்களில் பாலம் கட்டும் போதும், கால்வாய் மடை கட்டும் போதும் அப்பாவி மக்களை கூட்டிச்சென்று பலி கொடுப்பது அந்த கால வழக்கம். எனவே அதுபோன்ற ஒரு பலியை கொடுக்க மக்கள் முடிவு செய்தனர்.
உடனே மகராஜாவிடம் சென்று “நாங்கள் நரபலி கொடுக்கப் போகிறோம்” என்று கூறியுள்ளார். சிபிலி மகராஜா அதை நன்கு கேட்கிறார்.
பச்சையாற்றில் அணைக்கட்டியாகி விட்டது. பாளையங்கால்வாயும் வெட்டியாகி விட்டது. ஆனால் அதற்கு முன்பே கரை உடைந்தால் எப்படி தண்ணீர் செல்லும் . இதுவரை நாம் பணி செய்தும் எந்த பிரயோசனமும் இல்லாமல் போய் விடுமே. மக்களுக்கு இந்த திட்டம் பயன்பெற வேண்டுமே.
மந்திரி கூறினார். “ராஜா இந்த இடத்தில் ஏதாவது பையித்திய காரர்கள் சுற்றி வருவார்கள். அவரை கொண்டு வந்து நரபலி கொடுத்து விடுவோம்” என்றார்.
“சரி” என்று ராஜா தலையசைத்தாலும் அவருக்கு மனது கேட்கவில்லை. இதனால் தூக்கம் வராமல் தவித்தார்.
அன்று இரவு முழுவதும் யோசனை செய்து பார்க்கிறார் மகராஜா. “இது என் நாடு. நான் இந்த நாட்டை ஆளப்பிறந்தவர். இங்குள்ள குடி மக்கள் எல்லோருமே என் மக்கள் தான். இவர்களுக்கு நல்லது நான் தான் செய்ய வேண்டும். முழு பொறுப்பும் என் பொறுப்புத்தான். அப்படி இருக்கும் போது பயித்தியக்காரன் ஒருவனை நரப்பலி கொடுப்பது எப்படி சாலச்சிறந்தது. தவறு” என்று முடிவு செய்தார்.
மறுநாள் காலை காவலர்கள் நரபலி கொடுக்க பயித்திய காரன் ஒருவனை கூட்டி வந்தனர். அவனும் என்ன ஏது என்று தெரியாமல் வந்து நின்றான். அவனுக்கு புதுத்துணி உடுத்து கையில் திண்பண்டங்களை கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருந்தனர். அவனை கொல்லப்போகிறார்கள் என்று கூட தெரியாமல் அவன் சிரித்துக்கொண்டே இருந்தான்.
அங்கு மகராஜா வருகை தந்தார். பல்லக்கை விட்டு இறங்கி அவனிடம் வந்தார். அவனை பார்த்தார். “இவனை நரபலி கொடுக்க வேண்டாம். அவனுக்கு பதில் வேறு ஒருவரை ஏற்பாடு செய்துள்ளேன்” என்றார்.
அனைவரும் “யார்-?” என்று ஆச்சரியத்தோடு நின்றனர்.
மகராஜா கூறினார். “இங்கே பாருங்கள். இது என் நாடு. என் நாட்டு மக்களுக்காக இந்த அணையை கட்டுகிறேன். இந்த அணை உடைந்து விழுகிறது என்றால் அதை சரிசெய்வது என் கடமை. என் நாட்டில் என் மக்கள் யார் உயிரை எடுக்கவும் யாருக்கும் அனுமதி இல்லை. எனவே நான் முடிவு செய்துவிட்டேன். இந்த உடைப்பில் நானே விழுகிறேன். என் மீது கரையை கட்டுங்கள்” என்று உத்தரவிட்டு விட்டார். அதன் பின் அவரே தாமாக சென்று அந்த உடைப்பில் போய் படுத்துக்கொண்டார்.
அனைவரும் அதிர்ந்து நின்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். ஆனாலும் அரசரின் உத்தரவை தடுக்கவும் இயலவில்லை. அவரை அந்த உடைப்பில் போட்டு மூடி விட்டார்கள். அதன் பின் அந்த கரை உடையவும் இல்லை. இதுவரை பெரிய வெள்ளங்கள் வந்த போதும் கூட பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டும் இந்த இடத்தில் உடைப்பு ஏற்படவில்லை. தற்போது இந்த இடத்தினை சிபிலி ராஜா காவல் காத்துக்கொண்டிருக்கிறார் என மக்கள் நம்புகிறார்கள்.
அந்த இடத்தில் தான் சிபிலி ராஜா வுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ஒரு நடுகல் நாட்டப்பட்டுள்ளது. அதில் கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அந்த இடத்துக்கு நாங்கள் சென்றோம். இங்கு பங்குனி உத்திரத்தினை முன்னிட்டு திருவிழா நடைபெறும். இந்த இடத்தில் உத்திர சொக்க விநாயகர், மகா பூத சுவாமிகள், சீவிலி மகாராஜா ஆகியோர் அமர்ந்து அருள் புரிகிறார்கள். அவர்களுக்கான சிலைகள் வழிபாட்டுக்காக தயாராக உள்ளது. நாங்கள் அவ்விடத்துக்கு செல்ல நேரமான காரணத்தினால் அங்கிருந்த சபரி நாதன் அருகில் போடப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலை எல்லாம் பொறுக்கி ஓரிடத்தில் போட்டு வைத்திருந்தார். பாவம் அவருக்கு இயற்கை மீது கொள்ளை ஆசை. பனை வளர்ப்பில் அலாதி பிரியம். பிளாஸ்டிக் ஒழிப்பில் நிவேக் அவர்களுடன் இணைந்து பல்வேறு பணிகளை செய்து வருகிறார். பனைமரத்தினை வெட்டவிடாமல் தடுத்த வகைக்கு எதிரிகளால் தாக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று இப்போதுதான் வீட்டுக்கு வந்துள்ளார். இது போன்ற சமூக சேவகர்களை காண்பது அரிது. நாங்கள் அழைத்தவுடன் களப்பணிக்கு வந்து விட்டார். அவருக்கு நாங்கள் நன்றி கூறிக்கொள்கிறோம்.
கோபாலசமுத்திரம் வழியாக வந்த அவர் கைப்பத்து மடைக்கு பாளையங்கால்வாய் கரையில் எதிர்புறம் காரை நிறுத்தி விட்டு இந்த புறம் வந்து சிபிலி மகராஜா கோயிலில் அமர்ந்திருந்தார்.
இந்த கோயிலை சுற்றி ஆயிரக்கணக்கான பனைமரங்கள் நின்று கொண்டிருந்தது. அதை பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. இத்தனை பனைமரங்கள் இருந்த காரணத்தினால்தான் இந்த இடத்தில் கடந்த வருடம்(2023) டிசம்பரில் வந்த வெள்ளத்தில் எந்தவொரு உடைப்பு ஏற்படாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்பது உண்மை. அதனால் தான் கரைகளில் எல்லாம் பனை மரத்தினை வளர்ப்போம் என பிரச்சாரம் செய்து வருகிறோம். அந்த பணிகளையும் செய்து வருகிறோம்.
அருகிலேயே ஒரு பழைமையான கட்டிடம் இடிந்து கிடந்தது . அந்த கட்டிடம் தான் என்ன?. இந்த சிபிலி ராஜா யார்?
(நதி வற்றாமல் ஓடும்)