சுப. முத்துராமன் (பிறப்பு 7 ஏப்ரல் 1935) தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய திரைப்பட இயக்குனர் ஆவார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 75க்கும் கூடுதலான திரைப்படங்களை இயக்கி உள்ளார். தமிழ்த் திரையுலகில் வெற்றி நாட்டிய ஒருசில வணிகநோக்கு இயக்குனர்களில் இவரும் ஒருவர். துவக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் மற்றும் கமலஹாசன் படங்களை இயக்கி வந்தார். 1970களின் பிற்பகுதிகளில் இவருக்கும் ரஜினிகாந்த்திற்கும் ஏற்பட்ட தொழில்முறை உறவு பலப்பட்டு 25 திரைப்படங்களை இருவரும் இணைந்து உருவாக்கினர். ரஜனியின் திரைவாழ்வை வடிவமைத்ததிலும் அவரை வணிக அளவில் பெரும் வெற்றி நாயகராக மாற்றியதிலும் இவருக்குப் பெரும் பங்கிருந்தது. இவர் இரு தென்மண்டல பிலிம்பேர் விருதுகளையும் தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுள்ளார்.


