தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தூரத்தில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில் கிடந்ததை பார்த்துள்ளனர்.
இதையடுத்து அருகே சென்று பார்த்தபோது அது இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு என்பது தெரியவந்தது. மேலும் கவிழ்ந்த நிலையில் கிடந்ததால் யாரும் அருகே கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்களா என பார்த்தனர்.
அப்படி யாரும் இல்லாத நிலையில் தங்கள் கொண்டு சென்ற படகில் அந்த பைபர் படகை கயிறு கட்டி இழுத்து பெரியதாழை கடற்கரைக் கொண்டு வந்தனர்.
அதைத் தொடர்ந்து குலசேகரன்பட்டினம் கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலோர பாதுகாப்பு படையினர் பைபர் படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து இந்த படகை தூத்துக்குடி சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.
இவர்கள் மீட்டு வந்த இந்த பைபர் படகில் வந்தவர்கள் ஏதேனும் பகுதியில் கரை ஒதுங்கி உள்ளார்களா என்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


