தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று கூறி ஏஐசிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் சகாயம் தலைமையில் இன்று காலை விவிடி சிக்னல் அருகே வேலைக்கு செல்லாமல் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.
மேலும், ஆங்காங்கே துப்புரவு வண்டிகளை நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுடன் வடக்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இன்று மதியம் 3 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு சென்றனர்.


