பெருவழிப் பயணம்… பெரும் வலி பயணமாயிருந்தாலும், தன் உடலின் உறுதியை அறிந்து கொள்ளும் நல்வாய்ப்பாய் அமையப்பெற்றது..
எரிமேலியில் பேட்டை துள்ளி காளைகட்டியில் சிவபெருமானை வழிபட்டு பெருநடையாய் அழுதை நதியை அடைய, கடுங்குளிரான அழுதையில் மூழ்கி கல்லெடுத்து பத்திரப்படுத்தி…
ஆஹா… பிரம்மிப்பாய்… கொஞ்சம் பயத்துடனும் தயக்கத்துடனும் அழுதை மலை ஏற தொடங்கினோம்…
எப்பேர்ப்பட்ட கொம்பனாய் இருந்தாலும் அழுதை ஏறும் போது அழுதே ஆக வேண்டுமென்ற பேச்சுவழக்கை என்னால் நிச்சயமாய் மாற்ற இயலவில்லை… அழுதேன்.. மனதிற்குள் புலம்பினேன்…
அழுதையில் எடுத்த கல்லை மகிஷியின் பூத உடல் விழுந்த இடமான கல்லிடும் குண்று என்னுமிடத்தில் இட்டு ஒரு வழியாக அழுதை மலை உச்சி வந்தடைந்தோம்..
இளம் வயதுடைய தம்பிகள் கூட தவிங்கி போயினர். அடுத்ததாய் முக்குழியில் காளிதேவியை வழிபட்டு சொல்லொண்ணா அசதியில் மதிய உச்சி வெயில் வெக்கை மறந்து விரி எனப்படும் பந்தல்செட்டில் உறங்கிபோனாம் அசதியில்..
காலை சிற்றுண்டிக்குப்பின் நாராங்கி வெல்லம் (லெமன் ஜுஸ்), கட்டஞ் சாயா (பிளாக் டீ) நீராகாரத்துடனே யாத்திரை தொடர்ந்தது.
கூட வந்த வயதான சாமி ஒருவர் பல இடங்களில் தண்ணீர் கேட்க பெருவழி காட்டுப்பாதையில் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாதென்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கூரை கடைகளான விரிகளிலும் வாட்டர் பாட்டில்கள் விற்பதில்லை என்பதால் எங்கள் உணவே தர்பூசணி, அண்ணாச்சி பழம், வெள்ளரிக்காய் ஆகவே அமைந்தது..
காட்டுப்பாதையில் சில இடங்களில் மொபைல் டவர் கிடைக்க சிலர் குடும்பத்தோடு பேசி வலியை மறக்க முயற்சி செய்தனர். அடர்ந்த காட்டினுள் பல இடங்களில் காட்டு யானைகளின் எச்சங்கள் தென்படவே எங்கள் குருசாமி இரவில் யானைகள் நடமாட்டமிருப்பதாலே இரவு ஏழு மணிக்கு மேல் பெருவழி காட்டுப்பாதையில் நடக்க கேரள வனத்துறையால் அனுமதி வழங்கவில்லை என்றார்.. கரடுமுரடான குண்டுக்குழியுமான ஏற்ற இரக்கங்களில் வழிநடை சரண கோசங்களிட்டே அய்யப்பனை வழிதுணையாய் கொண்டு கடந்தோம்.
*கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை..
குண்டும் குழியும் கண்ணுக்கு வெளிச்சம், கடினம் கடினம் ஏற்றம் கடினம்..
ஏத்தி விடப்பா அய்யப்பா.. தூக்கி விடப்பா அய்யப்பா*
மாலை நேரம் நெருங்க நெருங்க நடையின் வேகம் கூடியது எப்படியாவது இருட்டுவதற்குள் கரிமலை உச்சியை அடைந்து விட வேண்டுமென்ற பயம் கலந்த ஆவல்.
யாத்திரையில் மனதில் பதிந்த வைர நினைவுகளில் எந்த கவலையுமே இல்லாத குழந்தை மணிகண்டனாய் காட்சியளிக்கக் கூடிய சிறுவன் சிறுமிகள் தங்களது மழலை குரலில் சரண கோசமுழங்க நடப்பது மனதை நெகிழச் செய்தது.. (அந்த குளிர் பனியிலும் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது)
கரிமலை ஏற்றம் வந்த உடனே கருணைக் கடலும் துணை வருவார் என்ற வீரமணிகண்டராஜு அவர்களின் பாடல்படியே அய்யன் துணையுடன் கரிமலை ஏறி வனதேவதையை வழிபட்டு பின் கரிமலை உச்சி பகவதியை வழிபட்டு இரவு எளிய உணவுடன் விரியில் தங்கினோம்… உறக்கம் வருமா என்ற எண்ணம் தோன்றும்முன்னே உறங்கிப்போனாம்…..
விடியற்லை முழுநிலா வெளிச்சத்திலும், பெண்டார்ச் லைட் உதவியுடன் கரிமலை இறங்க தொடங்கினோம்…
நான்கடி அகல பாதை இறக்கம் தவறுதலாய் காலடி வைத்தால் அகல பாதாளம்… நெஞ்சம் பதை பதைக்க மெதுவாய் கவனமாய் நடந்தோம்.
கலியுக வரதனின் கனிவின்றி நிச்சயமாய் பெருவழி யாத்திரை சாத்தியமில்லை என்பதை உணர்ந்தோம்…
பெருவழியில் நடக்கும் பாதங்களுக்கே அளப்பெரிய பெருமை என்பதாலேயே மாலை போட்ட நாளிலிருந்து நடைபெறும் பூஜைகளில் மாலை போட்ட சாமிமார்களின் பாதம் பணிகிறோம்..
காலை பம்பைக் கரையை அடைய திரிவேணி சங்கமத்தில் நீராடி மூதாதையருக்கு தர்ப்பணம் அளித்தோம்.. தர்ப்பணம் செலுத்திய பின் உடல் அசதி தீர கங்கை நதிபோல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடினோம்.. சில பக்தர்கள் தங்களது உடுத்திய துணிகளை பம்பையில் வீசி பாவக் கணக்குகளை கூட்டிக்கொண்டனர்.
பெருவழி நிறைவு பெற சிறுவழி என்று கூறும் யாத்திரை பம்பா சக்தி, பஜனை வழிபாடு, அன்னதானம் நிறைவுற ஆரம்பமானது. ஏற்கனவே ஆன் லைனில் பதிவு செய்திருந்த க்யூ டோக்கனையும் ஆதார் கார்டையும் கன்னி மூல கணபதியை தரிசித்த பின் திருவாங்கூர் தேவசம்போர்டு அலுவலர்களிடம் காண்பித்து மலையேற ஆரம்பித்தோம்..
கணக்கின்றி படிகள் தாண்டி நீலிமலையேற்றம், அப்பாச்சி மேடு தொட்டவுடன் கயிறு கட்டி வரிசையாய் விட ஆரம்பித்தார்கள்.. அரைமணி நேரம் காத்திருப்பு சிறிய தூரம் செல்லுதல் என்று படிப்படியாக சுமார் 5 மணிநேர காத்திருப்பிற்கு பின்னரே சன்னிதானத்தையும் கொடிமரத்தையும் காணப்பெறும் பாக்கியம் கிடைத்தது.. நடைப்பந்தல் தாண்டி 18 படிகளை கண்டபோது உள்ளம் உருக சரணகோசமிட்டு தேங்காய் விடலை போட்டு பொன்னு பதினெட்டு படிகள் ஏறினோம்.. நிறைய பக்தர்கள் பதினெட்டு படிகளையும் தொட வேண்டுமேன்று முண்டியடிப்பதால் ஏற்படும் தாமதத்தை போக்க படிகளின் இருபுறம் நிற்கும் காவலர்கள் பக்தர்களை தூக்கி விட்டு கூட்டத்தை கட்டுபடுத்த முயற்சித்தனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் கலங்கரை விளக்கமாய் தங்கக்கொடிமரம் மீது குதிரை தெரிய மணிகண்டனின் கோவில் வாசலில் தத்வமஸி என்ற வரிகள் மனதை ஈர்த்திட அதன் அர்த்தம் குருசாமியிடம் கேட்டேன் நீயே கடவுளாக இருக்கின்றாய் என்று மனித வாழ்வின் பொருளை ஒரே வார்தையில் அடங்கியதாய் உணர்ந்தோம்…
அழகான தெய்வமாம் அய்யப்பனை மனமுருகி வேண்டி மகிழ்ந்தோம்… விரத பலன் முழுமையாய் கிடைக்கப்பெற்று மனநிம்மதியுடன் மகிழ்வுடன் நெய்தேங்காய் உடைத்து நெய் அபிசேகத்தில் அய்யனைக் கண்டபின் மேல்சாந்தியின் ஆசிகள் பெற்று பிரசாதங்களான அப்பம் அரவனை வாங்கி மலையிரங்கினோம். ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா
கோபாலகிருஷ்ணன்


