தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பொதுமக்கள் அனைவரும் இணைந்து மீட்டெடுப்போம் என்று படகில் சென்று ஆய்வு செய்த நீரியல் நிபுணர் ராேஜந்திர சிங் கூறினார்.
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்து ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் ராஜஸ்தான் நீரியல் நிபுணர் ராஜேந்திர சிங் நெல்லை, தூத்துக்குடியில் ஆய்வு நடத்தி வருகிறார். அவர் நேற்று 3-வது நாளாக ஆத்தூர் அருகே மேலாத்தூர் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள வரபாஞ்சான், போபாஞ்சான் மடை வழியாக ஆற்றில் நேரடியாக கலக்க கூடிய சாக்கடை கழிவுகள் செல்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அந்த பகுதியில் தண்ணீரை ஆய்வுக்காக பாட்டிலில் எடுத்து கொண்டனர். பின்னர் அவர் தாமிரபரணி ஆறு, கடலில் சங்கமிக்கும் புன்னைக்காயல் முகத்துவாரத்தில் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கடலில் சங்கமிக்கும் இடத்தில் உள்ள கருப்பு மணலையும், அடுத்து உள்ள வெள்ளை மணல் மற்றும் தண்ணீரையும் ஆய்வுக்காக எடுத்துக்கொண்டார்.
பின்னர் ராஜேந்திரசிங் கூறியதாவது: தற்போது ஆய்வு செய்த சுமார் 25 இடங்களில் அந்தந்த இடத்திற்கு ஏற்ப ஆற்றில் தூய்மையை மீட்டெடுக்க அறிக்கை தாக்கல் செய்யப்படும். அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்கு ஏற்ப கழிவுநீர் சுத்திகரிப்பு மூலம் அல்லது கழிவுநீர் ஓடை உள்ளிட்டவற்றால் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியும். தாமிரபரணி ஆற்றின் அடையாளம் பாபநாசத்தில் தொடங்கி முடியும் பகுதி வரை தடையின்றி செல்ல வேண்டும்.
அப்போதுதான் இயற்கை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றுடன் வாழ முடியும். ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் உருவாக்கிய பம்பிங் செட், தடுப்பணை உள்ளிட்டவைகளை இயற்கையை தொடர்புபடுத்தி செய்யாததால் தற்போது தாமிரபரணி அழிவு நிலைக்கு சென்றுள்ளது. எனினும் அதை பொதுமக்களாகிய நாம் அனைவரும் இணைந்து மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது சமூக ஆர்வலர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, ஜெயபாலன், காமராஜ் காந்தி உள்ளிட்ட தாமிரபரணி பாதுகாப்பு அமைப்பினர் உடனிருந்தனர்.


