வல்லநாடு, அரசு மேல்நிலைப்பள்ளியில் மனித-விலங்கு முரண்பாடு மற்றும் வன விலங்கு வேட்டைத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மணக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கால்நடைகள் மூலம் வன விலங்குகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க திருநெல்வேலி வனத்துறை மற்றும் வன கால்நடை மருத்துவ பிரிவு, மூலம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிகழ்வில் வன கால்நடை பிரிவு மருத்துவர்கள் மனோகரன் மற்றும் சாந்தகுமார், வனச்சரக அலுவலர் கோ.பெ.சரவணன், வல்லநாடு கால்நடை உதவி மருத்துவர் ஆயிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனித-விலங்கு முரண்பாடு மற்றும் வன விலங்கு வேட்டைத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வல்லநாடு, அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோ.பெ.சரவணன், திருவைகுண்டம் வனச்சரக அலுவலர் வரவேற்புரை வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் மு.இளையராஜா, தலைமையேற்று பள்ளி மாணவர்களுடன் வன உயிரினங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் மனித-விலங்கு முரண்பாடு மற்றும் வன விலங்கு வேட்டைத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வன அலுவலர் மு.இளையராஜா, கொடியசைத்து துவங்கி வைத்தார்.
பள்ளி மாணவர்கள் மனித-விலங்கு முரண்பாடு குறித்த வாசகங்களை கூறியும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் வல்லநாடு கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி சென்றனர். பின்னர் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட அரும்புகள் அறக்கட்டளையினரின் கலைநிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு வன விலங்குகளின் முக்கியத்துவம் குறித்தும், வேட்டையாடி வன விலங்குகளை அழிப்பதால் வரும் பேராபத்து குறித்தும் வன விலங்குகளை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மோகன், திருமலை, பாறைக்காடு கிராம வனக்குழு தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


