தூத்துக்குடியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி இன்று தொடங்கியது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையானது, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் நடத்தும் ‘‘படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி” என்ற ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சியானது 05.05.2025 முதல் 12.05.2025 வரை நடைபெற உள்ளது.
இதன் துவக்க விழாவானது 05.05.2025 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் வைத்து நடைபெற்றது. இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 21 விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர். மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் த. ரவிக்குமார் வரவேற்புரை மற்றும் பயிற்சி விளக்கவுரையாற்றினார்.
விழாவிற்கு ப. அகிலன், முதல்வர், மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தலைமையேற்றார். அவர் தம் தலைமையுரையில் மீன்பிடித் தொழில்நுட்பத் துறையில் மீனவர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவை பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மூலம் மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இவ்விழாவில் ந. சந்திரா, இணை இயக்குநர், தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தூத்துக்குடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவர் தம் சிறப்புரையில் இப்பயிற்சியானது கடலில் இருக்கும்போது படகு என்ஜினில் ஏற்படும் சிறிய பழுதுபார்ப்புகளின் குறைபாடுகளை மீனவர்களே சரிசெய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் இப்பயிற்சினை நடத்தியதற்காக மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை பாராட்டினார். உதவி இயக்குநர் க. ஜெனார்த்தனம், மற்றும் தூத்துக்குடி தமிழ்நாடு கடல்சார் பயிற்சிக் கழகம் முதலவர் கேப்டன் ஜே. மோகன்குமார் வாழ்த்துரை வழங்கினர். உதவிப் பேராசிரியர் ச. மாரியப்பன் நன்றியுரை ஆற்றினார். உதவிப் பொறியாளர் அ. அந்தோணி மைக்கேல் பிரபாகர், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


